புது தில்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், ஆறு வார காலத்துக்குள் குறிப்பிட்ட திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டதால், அது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் கர்நாடகாவும், கேரளாவும், அது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, ஸ்கீம் அதாவது ஒரு திட்டம் என்றுதான் கூறியுள்ளது. எனவே அது மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிடவில்லை. இதையும் மீறி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூறின. இதனால் மத்திய நீர்வளத்துறை குழம்பிப் போனது.
இதனிடையே கேரளம் இது குறித்து உச்ச நீதிமன்றமே விளக்கம் தரட்டும் என்று சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசும் வேறு வழியின்றி, ஸ்கீம் என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கவும், மேற்கொண்டு செயல்பட வேண்டிய நடமுறைகள் குறித்து விவாதிக்கவுமே, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டங்களுக்கு 5 வார கால அவகாசம் ஓடிய நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. இதனால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம், மார்ச் 29ம் தேதி நிறைவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படவில்லை என்று மார்ச் 31ம் தேதி மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தொடர்ந்து புதுச்சேரியும் வழக்கு தொடர, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த ‘ஸ்கீம்’ என்பதன் விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவற்றை திங்கள் கிழமை இன்று விசாரிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்; இரு மாநிலங்களும் பாதிக்கப் படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி, மே.3ம் தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கை தயாரித்தளிக்க வேண்டும் என்று க்கூறியதற்கு, மத்திய அரசு எந்த மறுப்பையோ, ஆட்சேபணையையோ தெரிவிக்கவில்லை.
முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.