குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, 97 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், 28 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்டார்.
2002ம் வருட குஜராத் கலவரத்தின்போது ஆமதாபாத் புறநகர்ப் பகுதியான நரோடா பாட்டியாவில் 35 குழந்தைகள் 36 பெண்கள் உட்பட 97 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சற் மாயாபென் கோட்னானி, பஜ்ரங் தள, அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என 2012 ஆகஸ்ட்டில் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
அப்போது, கலவர கும்பலை வழிநடத்தியதாக மாயாபென் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனையும், கொடூரமான முறையில் கலவரத்தை அரங்கேற்றியதாக பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மாயாபென் கோட்னானி உள்ளிட்ட 16 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட தீர்ப்பை, 21 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று காலத்தைக் குறைத்து உத்தரவிட்டது.