spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

- Advertisement -

MannKibaat

* பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 43ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 29.04.2018)

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை ஆஸ்ட்ரேலியாவில் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  பாரதம் உள்ளிட்ட உலகின் 71 நாடுகள் இதில் பங்கு பெற்றன.  இத்தனை பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கிறார்கள் எனும் போது, எத்தகைய சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.  உற்சாகம், எதிர்பார்ப்பு, ஊக்கம், ஆசை, அபிலாஷைகள், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி – இப்படிப்பட்டதொரு சூழல் நிலவும் வேளையில், இதன் தாக்கம் இல்லாதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

இன்று யார் வெற்றிகரமாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டுமக்களிடையே ஒவ்வொரு நாளும் இருந்து வந்தது.  பாரதத்தின் செயல்பாடு எப்படி இருக்கும், நாம் எத்தனை பதக்கங்களை வெல்லப் போகிறோம் என்றெல்லாம் சிந்திப்பது இயல்பான விஷயம் தான்.  நமது விளையாட்டு வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார்கள், ஒன்றன்பின் ஒன்றாக பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அது துப்பாக்கிச் சுடும் போட்டியாகட்டும், மல்யுத்தமாகட்டும், பளுதூக்குவதாகட்டும், டேபிள் டென்னிஸாகட்டும், பூப்பந்தாகட்டும்…… பாரதம் இன்றுவரை காணாத சாதனையைப் படைத்தது.  26 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்களும், 20 வெண்கலப் பதக்கங்களும் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று, நாட்டு மக்களை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறார்கள்.  பதக்கங்களை வெல்வது வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருந்தாலும், நாடு முழுமைக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வேளையும் கூட.

போட்டி முடிவடைந்த பிறகு, பதக்கத்துடன் பாரதத்தின் பிரதிநிதிகளாக வீரர்கள் மூவண்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, தேசிய கீதம் ஒலிக்க நிற்கும் போது எழும் உணர்வு இருக்கிறதே, அதில் சந்தோஷம், பெருமிதம், கௌரவம் ஆகியன கலந்திருக்கின்றன, மிகச் சிறப்பான, தனித்தன்மை வாய்ந்த ஒரு உணர்வு அது.  உடலும் மனமும் சிலிர்க்கின்றன. உற்சாகமும் ஊக்கமும் கொப்பளிக்கின்றன. நாமனைவரும் ஒரே உணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம்.  இந்த உணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை.  ஆனால் இந்த விளையாட்டு வீரர்கள் என்னிடம் கூறியவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது, உங்கள் நெஞ்சங்களும் விம்மும் என்று நம்புகிறேன்.

 நான் மனிகா பத்ரா, காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று வந்திருக்கிறேன்.  2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்.  நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை மனதின் குரல் நேயர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், முதன்முறையாக இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு இத்தனை பிரபலமாக ஆகி வருகிறது என்பதால் தான்.  இதுவரை ஆடாத அளவுக்கு நான் சிறப்பான வகையில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை விளையாடினேன். என் பயிற்சிக்காலம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நான் என் பயிற்றுநர் சந்தீப் சாருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு போர்ச்சுகல் நாட்டில் எங்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்றன, எங்களை அரசாங்கம் பல போட்டிகளுக்கு அனுப்பியது, நான் அரசுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், அவர்கள் தான் எங்களுக்கு இத்தனை பெரிய அளவுக்கு சர்வதேச வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.  இளைஞர்களுக்கு நான் அளிக்க விரும்பும் தகவல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் துவண்டு விடாதீர்கள், உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் என்பது தான்.

நான் P. குருராஜ்; மனதின் குரல் நேயர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் ஜெயிப்பது என்பது என் கனவாக இருந்தது.  நான் முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டுக்களில் பங்கெடுத்து, பாரதத்துக்கு பதக்கத்தைப் பெற்றுத் தந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இந்தப் பதக்கத்தை என் கிராமம் குந்தாபுராவுக்கும், என் மாநிலம் கர்நாடகத்துக்கும், என் தேசத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நான் மீராபாய் சானூ.  நான் 21ஆம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறேன்.  இது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.  இந்தியாவுக்காகவும், மணிப்பூருக்காகவும் சிறப்பான விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.  மணிப்பூரில் என் சகோதரியின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்த பிறகு, அவர் பற்றிய திரைப்படத்தை முழுவதுமாகக் கண்ட பிறகு நானும் இந்தியாவுக்காக, மணிப்பூருக்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு உண்டானது.  நான் வெற்றியடைந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் ஒழுங்குமுறை, என் முனைப்பு, என் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியன தான்.

காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது, விசேஷமாகவும் இருந்தது.  ஏன் விசேஷம் என்கிறேன் என்றால், இதில் பல விஷயங்கள் முதன்முறையாக நடந்தேறின.  இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் தரப்பில் பங்கெடுத்துக் கொண்ட மல்யுத்த வீரர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று வந்திருக்கிறார்கள்.  மனிகா பத்ரா, தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டுக்களிலும் பதக்கங்களைத் தட்டி வந்திருக்கிறார்.

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாரதப் பெண் இவர் தான்.  பாரதத்திற்கு அதிக அளவு தங்கம் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கிடைத்தது.  15 வயது நிரம்பிய பாரதத்தின் துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் அனீஷ் பான்வாலா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிகக் குறைந்த வயது விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்.

சச்சின் சௌத்ரி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பாரதநாட்டின் ஒரே para power lifter. மேலும் இந்தமுறை போட்டிகள் ஏன் விசேஷமானவையாக இருந்தன என்றால், பெரும்பான்மையான வெற்றியாளர்கள் பெண்கள் என்பதால் தான்.  ஸ்க்வாஷாகட்டும், குத்துச்சண்டையாகட்டும், பளுதூக்குதலாகட்டும், துப்பாக்கி சுடும் போட்டியாகட்டும், பெண் வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

பூப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி பாரதத்தின் இரண்டு வீராங்கனைகளான சாய்னா நெஹ்வாலுக்கும் பி.வி. சிந்துவுக்கும் இடையே நடைபெற்றது.  அனைவருக்குமே போட்டி உற்சாகத்தை அளித்தது என்றாலும், இரண்டு பதக்கங்களும் பாரதத்துக்கே கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி, இதை நாடு முழுவதும் கண்டு களித்தது.  நானுமேகூட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  போட்டிகளில் பங்கெடுத்த வீரர்கள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, சின்னச்சின்ன நகரங்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.

பல தடைகள், இடர்களையெல்லாம் தாண்டி இந்த நிலையை எட்டியிருந்தார்கள், சாதித்திருக்கிறார்கள், அவர்கள் இன்று எட்டியிருக்கும் இந்த இலக்கினை அடைய, அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பெற்றோர், அவர்களின் காப்பாளர்கள், அவர்களின் பயிற்றுநர், விளையாட்டு உதவியாளர்கள், அவர்களின் பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் சூழல் என அனைவரின் பங்களிப்பும் கலந்திருக்கிறது, அவர்கள் தான் ஒவ்வொரு கட்டத்திலும் வீரர்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள்.  இந்த வேளையில் நான் வீரர்களோடுகூட, இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மாதம் மனதின் குரலில் நான் நாட்டுமக்களிடம், குறிப்பாக நமது இளைஞர்களிடத்தில் FIT INDIA குறித்த அறைகூவல் விடுத்திருந்தேன், அனைவரும் வாருங்கள் என்று அழைத்திருந்தேன்.  FIT INDIAவுடன் இணையுங்கள், தலைமையேற்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு இதனோடு இணைந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  பலர் இதற்காகத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், சமூக ஊடகத்தில் தங்கள் உடலுறுதி தொடர்பான முக்கியமான விஷயங்களையும், FIT INDIA தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சசிகாந்த் போன்ஸ்லே என்ற ஒருவர் நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து கொண்டு, என் உடல் தான் என் ஆயுதம், தண்ணீர் தான் என் தனிமம், நீச்சல் தான் என் உலகம், என்று எழுதியிருக்கிறார்.

ரூமா தேவ்நாத் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? காலை நடைப்பயணத்திற்குப் பிறகு நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன்; என்னைப் பொறுத்த மட்டில் உடலுறுதி என்பது புன்னகை கலந்தது, நாம் சந்தோஷமாக இருக்கும் போது, புன்னகை பூக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.  தேவ்நாத் அவர்களே, மகிழ்வாக இருத்தலே உடலுறுதி.

தவல் ப்ரஜாபதி அவர்கள் மலையேறும் போது எடுக்கப்பட்ட தனது படத்தைத் தரவேற்றம் செய்து, என்னைப் பொறுத்த மட்டில் FIT INDIA என்றால் பயணமும், மலையேறுதலும் தான் என்று தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, பல பிரபலமானவர்களும்கூட FIT INDIAவுக்காக நமது இளைஞர்களுக்கு மிக சுவாரசியமான வழிகளில் உத்வேகம் அளித்து வருவது நன்றாக இருக்கிறது.  திரைப்பட நட்சத்திரமான அக்ஷய் குமார் ட்விட்டரில் ஒரு காணொளியைத் தரவேற்றம் செய்திருக்கிறார்.  அதை நானும் பார்த்தேன், நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்; இதில் அவர் மரத்தாலான மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம், இந்தப் பயிற்சி முதுகுக்கும், வயிற்றுத் தசைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

அவருடைய இன்னொரு காணொளியும் அதிக பிரபலமடைந்திருக்கிறது, இதில் அவர் மக்களோடு கைப்பந்து விளையாடுவதைப் பார்க்கலாம்.  பல இளைஞர்களும் FIT INDIA முயற்சிகளோடு தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இது போன்றதொரு இயக்கம் நம்மனைவருக்கும், நாடு முழுமைக்கும் அதிக பயனுள்ளது என்று நான் கருதுகிறேன்.  மேலும் ஒரு விஷயம் குறித்து நான் தெரிவிக்க விரும்புகிறேன் – எந்தச் செலவும் இல்லாத, FIT INDIA தொடர்பான இயக்கத்தின் பெயர் தான் யோகக்கலை.

FIT INDIA இயக்கத்தில் யோகக்கலைக்கென சிறப்பான மகத்துவம் இருக்கிறது, நீங்களும் கூட தயாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கியிருப்பீர்கள்.  ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினத்தின் மகத்துவத்தை தேசம் முழுவதும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நீங்களும்கூட, இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்ளுங்கள்.  தனியாக அல்ல – உங்கள் நகரம், உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் பள்ளி, உங்கள் கல்லூரி என அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும், யோகக்கலையோடு இணைந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.  முழுமையான உடல் வளர்ச்சிக்காக, மனரீதியான வளர்ச்சிக்காக, மனதின் சீர்நிலைக்காக யோகக்கலை எந்த வகையில் பயனளிக்கிறது என்பதை நாட்டுக்கோ, உலகுக்கோ விளக்க வேண்டிய தேவையில்லை; நீங்கள் ஒரு animated காணொளியைப் பார்த்திருக்கலாம், இதில் என்னைக் காட்டியிருக்கிறார்கள், இன்றைய அளவில் அது மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.

Animation செய்தவர்களுக்கு நான் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் மிகவும் நுணுக்கமாகப் பணியாற்றி, ஒரு ஆசிரியர் செய்யக்கூடிய வகையில் animationஐ அமைத்திருக்கிறார்கள்.  நீங்களும் இதனால் பலன் பெறுங்கள்.

எனது இளைய நண்பர்களே.  நீங்கள் தேர்வு, தேர்வு எனத் தேர்வு சுழற்சியிலிருந்து வெளியேறி, இப்போது விடுமுறைக்காலத்தைக் கழிப்பது பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருப்பீர்கள்.  விடுமுறைகளை எப்படி அனுபவிக்கலாம், எங்கே செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள்.  நான் இன்று உங்களை ஒரு புதிய பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன்; பல இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ள தங்கள் நேரத்தைச் செலவு செய்வதை நான் பார்க்க முடிகிறது.

கோடைக்காலப் பயிற்சியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இளைஞர்களும் இதுகுறித்த தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள், உள்ளபடியே பயிற்சி என்பது ஒரு புதிய அனுபவம் தான்.  நான்கு சுவர்களுக்கு வெளியே, எழுத்துவேலைகள், கணிப்பொறியைத் தாண்டி, வாழ்க்கையை புதிய கோணத்தில் வாழும் அனுபவம் கிடைக்கிறது.  எனது இளைய நண்பர்களே, சிறப்பான பயிற்சி ஒன்றை மேற்கொள்ள நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாரத அரசின் 3 அமைச்சகங்கள் – விளையாட்டுத் துறையாகட்டும், மனிதவள மேம்பாட்டுத் துறையாகட்டும், குடிநீர்வழங்கல் துறையாகட்டும் – அரசின் இந்த மூன்று அமைச்சகங்களும் இணைந்து தூய்மையான இந்தியா கோடைக்கால பயிற்சி 2018 என்ற ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கல்லூரி மாணவ மாணவியர், தேசிய மாணவர் படையின் இளைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தின் இளைஞர்கள், நேரு யுவா கேந்திரத்தின் இளைஞர்கள் எல்லோரும் சமுதாயத்துக்காக, தேசத்துக்காக என்ன செய்ய நினைக்கிறார்களோ, கற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ, சமுதாய மாற்றத்தின் பொருட்டு, யார் தாங்களாகவே இணைந்து கொள்ளவும், காரணியாக ஆகவும் விரும்புகிறார்களோ, ஆக்கப்பூர்வமான ஆற்றலின் துணை கொண்டு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு செயல்படும் அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு; இதனால் தூய்மைப்பணிக்கும் வலுகூட்டப்படும்.

நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அதற்கு முன்பாக, ஏதாவது சாதிக்கும் சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கும், யார் மிகச் சிறப்பாக பயிற்சியில் செயல்படுகிறார்களோ – அவர்கள் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கலாம், பல்கலைக்கழகங்களில் செய்திருக்கலாம் – அப்படிப்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும், பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ வாயிலாக ஒரு சான்றிதழும் அளிக்கப்படும்.  இது மட்டுமல்ல, இதைச் சிறப்பாக யார் நிறைவு செய்கிறார்களோ, பல்கலைக்கழக மானியக்குழு அவர்களுக்கு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும்.  நான் மாணவ மாணவியரிடத்திலும், இளைஞர்களிடத்திலும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன், பயிற்சியினால் பலனடையுங்கள்.  நீங்கள் MyGov இணையதளம் சென்று Swachh Bharat Summer Internshipஇல் பங்கெடுக்க உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

நமது இளைஞர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.  நீங்கள் உங்களிடமிருக்கும் தகவல்களைக் கண்டிப்பாக அனுப்புங்கள், புகைப்படங்களை அனுப்புங்கள், காணொளிகளைத் தரவேற்றம் செய்யுங்கள்.  வாருங்கள்! ஒரு புதிய அனுபவம் பெற, இந்த விடுமுறைக் காலத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்வோம்.

எனதருமை நாட்டுமக்களே, எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் Good News India என்ற நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள், நாட்டுமக்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் Good News India நிகழ்ச்சியைப் பாருங்கள், நமது தேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றி வருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல்லாம் அதில் காணக் கிடைக்கின்றன.

சில தினங்கள் முன்பாக, தில்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப் பற்றி ஒரு விஷயத்தை Good News Indiaவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்த இளைஞர்கள், தில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப்பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப் புதுமையான செயலைத் தொடங்கினார்கள்.  தில்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு துவங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது.  இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக்காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தராகண்டின் மலைப்பகுதியின் சில விவசாயிகள், நாடுமுழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக்கிறார்கள்.  அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள்.  உத்தராகண்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப்படுகிறன.  மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக்காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதை விட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள்.  என்ன செய்தார்கள்?

அவர்கள் தங்கள் விளைப்பொருட்களிலிருந்து பிஸ்கட்டுக்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள்.  இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்டுக்களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது.

முனார் கிராமத்தில் இவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார்கள், அங்கே பிஸ்கட்டுக்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள்.  விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை தேசிய ஊரகப்பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்டுக்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கௌசானி வரைகூட கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 இலட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடைப்பட்டிருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே!  எதிர்காலத்தில் உலகத்தில் தண்ணீருக்காக போர்கள் நடைபெறவிருக்கின்றன என்றெல்லாம் நாம் கேள்விப் படுகிறோம் இல்லையா?  ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா?  நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா?

இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.  மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம்?  நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.  பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள்.  அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள்.

உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.  இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம்.

குஜராத்தில் அடாலஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் மகோன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம்.  நீங்கள் இராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள்.

இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று, கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான்.  ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எத்தனைக்கெத்தனை தயார்நிலையில் இருக்கிறோமோ, அத்தனைக்கத்தனை பலன்கள் கிடைக்கின்றன.

மஹாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவு செலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது.  கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் மஹாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன.

2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன.

நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மஹாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

கங்கை, யமுனை ஆகியன நீர் நிறைந்த நதிகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு நதிகள் வறண்டு விட்டன.  மாவட்ட நிர்வாகம் மஹாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள்.

சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன.  விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா?

மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரவிருக்கின்றன, நீர்சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்காக நாமும் சில பொறுப்புக்களைச் சிரமேற்போம், நாமும் சில திட்டங்களைத் தீட்டுவோம், நாமும் ஏதாவது சாதித்துக் காட்டுவோம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

என் பாசமிகு நாட்டுமக்களே, மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக எனக்கு நாலாபுறத்திலிருந்தும் செய்திகள் வருகின்றன, கடிதங்கள் குவிகின்றன, தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.  மேற்கு வங்கத்திலிருக்கும் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் தேவீதோலா கிராமத்தைச் சேர்ந்த ஆயன் குமார் பேனர்ஜி அவர்கள், MyGovஇல் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் – நாம் ஒவ்வொரு ஆண்டும் ரபீந்திர ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம் என்றாலும், பலர் நோபல் பரிசு வென்ற ரபீந்திரநாத் டகோரின் ’அமைதியாக, அழகாக, நேர்மையாக வாழும் தத்துவம்’ பற்றித் தெரிந்திருக்கவில்லை.  தயவுசெய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த விஷயம் குறித்துப் பேச வேண்டும், இதன் வாயிலாக மக்கள் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நான் ஆயன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மனதின் குரலின் அனைத்து நண்பர்களின் கவனத்தை இந்தத் திசையில் திருப்பியிருக்கிறார்.  குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் ஞானம், விவேகம் ஆகியவற்றின் முழுமையான வடிவமாகத் திகழ்ந்தார், அவரது எழுத்துக்கள் படித்தோர் அனைவரின் மனங்களிலும் அழிக்கமுடியாத முத்திரையைக் பதித்திருக்கிறது.  ரபீந்திரநாத் – அறிவுத்திறன் வாய்ந்தவர், பன்முகத்தன்மை நிறைந்தவர், ஆனால் அவருக்குள்ளே ஒவ்வொரு கணமும் ஒரு ஆசிரியர் உயிர்ப்போடு இருந்தார் என்பதை நாம் அனுபவிக்க இயலும்.  He, who has the knowledge has the responsibility to impart it to the students, அதாவது யாரிடத்தில் ஞானம் இருக்கிறதோ, அதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று தனது கீதாஞ்சலியில் அவர் எழுதியிருக்கிறார்.

நான் வங்காள மொழி அறிந்தவனல்ல ஆனால், என் சிறுவயதில் அதிகாலை விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்; கிழக்கு பாரதத்தில் வானொலி ஒலிபரப்பு விரைவாகவே தொடங்கி விடும், மேற்கு பாரதத்தில் தாமதமாகவே தொடங்கும். சுமாராக 5.30 மணிக்கு ரபீந்திர சங்கீத் தொடங்கும், வானொலியில் அதைக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.  மொழி தெரியாது, அதிகாலை எழுந்து, வானொலியில் ரபீந்திர சங்கீத் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுப் போனது.

ஆனந்தலோகே, ஆகுனேர், போரோஷ்மோனீ – இந்தக் கவிதைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில், மனதில் மிகப்பெரிய அளவில் உத்வேகம் பிறக்கும்.  உங்களையும் ரபீந்திர சங்கீத், அவரது கவிதைகள் கண்டிப்பாக வசப்படுத்தியிருக்கும்.  நான் ரபீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு என் மரியாதை கலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில நாட்களில் ரமலான் புனித மாதம் தொடங்க இருக்கிறது.  உலகெங்கிலும் ரமலான் மாதம் முழுமையான சிரத்தையுடனும், மரியாதையுடனும் கொண்டாடப் படுகிறது.  நோன்பின் சமூகப் பக்கம் என்னவென்றால், மனிதன் பட்டினி கிடக்கும் போது தான் அவனுக்கு மற்றவர்களின் பசி பற்றிய உணர்வு ஏற்படுகிறது, அவன் தாகத்தோடு இருக்கும் போது தான், மற்றவர்களின் தாகம் பற்றிய உணர்வு உண்டாகிறது என்பது தான்.  இறைத்தூதர் மொஹம்மத் சாஹப் விடுத்த செய்தியையும் அளித்த உபதேசத்தையும் நினைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது.  சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த பாதையில் பயணிப்பது தான் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடம்.

ஒருமுறை ஒரு மனிதன் இறைத்தூதரிடம், இஸ்லாத்தில் எந்தச் செயல் புரிவது மிகவும் சிறப்பானது என்று கேட்டான்.  இதற்கு இறைத்தூதர், ‘ஏழைகளுக்கும் தேவையிருப்பவர்களுக்கும் உணவளித்தல், நாம் அறிந்திருந்தாலும் சரி, அவர்களை அறியாவிட்டாலும் சரி, அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தோடு இருத்தல் தான்’ என்றார்.  இறைத்தூதர் மொஹம்மத் சாஹப் ஞானம், கருணை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்.  அவருக்கு எதன் மீதும் கர்வம் இருக்கவில்லை.  செருக்கு தான் ஞானத்தைத் தோற்கடிக்கக் கூடியது என்பார்.

உங்களிடத்தில் ஏதாவது ஒரு பொருள் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் அதை தேவைப்படும் மனிதருக்கு அளியுங்கள் என்று இறைத்தூதர் மொஹம்மத் சாஹப் கூறியிருக்கிறார்; ஆகையால் தான் ரமலான் மாதத்தில் கொடைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.  மக்கள் இந்தப் புனித மாதத்தில் வறியவர்களுக்கு தானங்கள் அளிக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் தனது தூய்மையான ஆன்மா காரணமாகவே செல்வந்தனாக ஆகிறானே ஒழிய, அவனிடத்தில் இருக்கும் செல்வத்தினால் அல்ல என்பது இறைத்தூதர் மொஹம்மத் சாஹபின் கூற்று. நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம் நிறைந்த அவரது போதனைகள்படி நடக்க கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் பிரியம்நிறை நாட்டுமக்களே, புத்த பூர்ணிமா ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சிறப்பான தினம்.  கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்திய மகான் பகவான் புத்தரின் பூமி பாரதம் என்பது நமக்குப் பெருமை அளிக்க வேண்டும்; அவர் உலகெங்கும் இருக்கும் இலட்சோப இலட்சம் மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். இந்த புத்த பூர்ணிமா தினத்தில் பகவான் புத்தரை நினைவில் இருத்தி, அவரது பாதையில் பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளவும், மனவுறுதி பூணவும், அதன்படி நடக்க வேண்டும் என்று நமக்கிருக்கும் பொறுப்பை புத்த பூர்ணிமா மீண்டும் நினைவுறுத்துகிறது.

பகவான் புத்தர் சமத்துவம், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உத்வேக ஊற்று.  இவை மனிதத்தின் விழுமியங்கள், இன்றைய உலகிற்கு இவற்றின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.  பாபாசாஹேப் டா. அம்பேட்கர், தனது சமூக தத்துவத்துக்கான பெரிய உத்வேகம் பகவான் புத்தரிடமிருந்து தான் கிடைத்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

My Social philosophy may be said to be enshrined in three words; liberty, equality and fraternity.  My Philosophy has roots in religion and not in political science.  I have derived them from the teaching of my master, The Buddha.

பாபாசாஹேப் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பாதிக்கப்பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களாகட்டும், விளிம்பில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஆற்றல் வழங்கினார்.  கருணைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு ஒன்று இருக்க முடியாது.  மக்களின் துயர் துடைப்பதில், கருணையானது பகவான் புத்தரின் மிகப்பெரிய மகத்தான குணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.  புத்த பிட்சுக்கள் பல்வேறு நாடுகளில் யாத்திரைகள் மேற்கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் தங்களுக்குத் துணையாக பகவான் புத்தரின் செறிவான கருத்துக்களைக் கொண்டு சென்றார்கள், இந்தச் செயல்பாடு அனைத்துக் காலகட்டங்களிலும் நடைபெற்று வந்தது.  ஆசியா முழுவதிலும் பரவியிருக்கும் பகவான் புத்தரின் போதனைகள் நமது பாரம்பரியச் சொத்து.

பல ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் போன்ற பல நாடுகளில் பௌத்த பாரம்பரியம், புத்தரின் வழிமுறை, அவர்களின் வேர்களோடு கலந்திருக்கிறது.  இந்தக் காரணத்தால் தான், நாம் பௌத்த சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்தி வருகிறோம்.  இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மகத்துவம் நிறைந்த இடங்களை பாரதத்தின் சிறப்பான பௌத்த சமய இடங்களோடு இணைக்கிறது.  பாரத அரசு பல பௌத்த சமய இடங்களைப் புதுப்பிக்கும் செயல்பாடுகளில் பங்களிப்பு நல்கி வருகிறது என்பது எனக்கு ஆழமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  இதில் மியான்மாரின் பாகானில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வைபவ்சாலீ ஆனந்த வழிபாட்டு இடமும் அடங்கும்.

இன்று உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்களும், மக்களின் துயரமும் காணப்படுகின்றன.  பகவான் புத்தரின் போதனை வெறுப்பைக் கருணையால் அகற்றும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது.  நான் உலகெங்கிலும் பரவியிருக்கும், பகவான் புத்தரிடத்தில் பக்தி பூண்டிருப்போருக்கும், கருணைக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மற்றுமனைவருக்கும் புத்த பூர்ணிமைக்கான மங்கலமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் புத்தரிடமிருந்து ஒட்டுமொத்த உலகிற்கும் ஆசிகளை இறைஞ்சுகிறேன்; இதன் வாயிலாக, அவரது போதனைகளின் அடிப்படையில் அமைதியான, கருணைமயமான ஒரு உலகை உருவாக்கும் நமது பொறுப்பை நிறைவேற்ற இயலும்.  இன்று நாமனைவரும் பகவான் புத்தரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.  நீங்கள் laughing Buddha உருவச்சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவற்றைப் பற்றிக் கூறும் வேளையில், இந்த சிரிக்கும் புத்தர் அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தருவார் என்று கூறப்படுகிறது,

ஆனால் புன்சிரிப்புத் தவழும் புத்தர் பாரதத்தின் பாதுகாப்புச் சரிதத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த சம்பவத்தோடு தொடர்புடையவர் என்பதை வெகு சிலரே அறிவார்கள். அது சரி, புன்சிரிப்பு தவழும் புத்தருக்கும், பாரதப் படையினருக்கும் இடையே என்ன தொடர்பு என்று நீங்கள் சிந்திக்கலாம்.  இன்றிலிருந்து 20 ஆண்டுகள் முன்பாக 1998ஆம் ஆண்டு, மே மாதம் 11ஆம் தேதி உங்களுக்கு நினைவிருக்கலாம்; அன்று மாலை, அப்போதைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்றியது ஒட்டுமொத்த தேசத்துக்கும் கௌரவம், பராக்கிரமம் ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்தி, மகிழ்ச்சியால் நாடு முழுவதையும் நிறைத்தது.  உலகெங்கும் பரவியிருக்கும் பாரத வம்சாவழியினரிடம் புதிய தன்னம்பிக்கை துளிர் விட்டது. அந்த நாளும் ஒரு புத்த பூர்ணிமை தான்.

1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி, பாரதம் தனது மேற்கு எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரணில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது.  பாரதத்தின் பரிசோதனை வெற்றி பெற்றது. ஒருவகையில் பார்த்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரதம் தனது வல்லமையை பறைசாற்றியது என்று கூறலாம்.  அந்த நாள், பாரத வரலாற்றிலே, நம்நாட்டுப் படைகளின் ஆற்றலைப் பொன்னெழுத்துக்களில் பொறித்த நன்னாள்.

பகவான் புத்தர், அந்தராத்மாவின் சக்தி, அமைதிக்கு அவசியமானது என்று காட்டினார்.  இதைப் போலவே இன்று நாம் ஒரு தேசம் என்ற முறையில் பலமாக இருந்தால் தான், நாம் அனைவருடனும் அமைதியாகவும் இருக்க முடியும்.  1998ஆம் ஆண்டு மே மாதத்தில் நாம் அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொண்டதால் மகத்துவம் வாய்ந்ததாக ஆகவில்லை; ஆனால் எந்த வகையில் அதை மேற்கொண்டோம் என்பதாலேயே அதன் மகத்துவம் ஏற்படுகிறது.

பாரதபூமி மகத்தான விஞ்ஞானிகள் நிறைந்த பூமி, பலமானதொரு தலைமையின் கீழ் பாரதம் தினம் தினம் புதிய புதிய இலக்குகளையும், சிகரங்களையும் அடையும் வல்லமை பெற்றது என்பதை உலகுக்கு அன்று தான் நாம் பறைசாற்றினோம்..  அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் அளித்த மந்திரம் இது தான் – ஜெய் ஜவான் ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான் –1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியின் 20ஆம் ஆண்டினை நாம் கொண்டாடும் வேளையில், பாரதத்தின் சக்திக்காக, அடல் அவர்கள் அளித்த ‘ஜெய் விஞ்ஞான்’ மந்திரத்தை நம்முள் கரைத்துக் கொண்டு, புதிய நவீன பாரதத்தை உருவாக்க, சக்திபடைத்த பாரதம் படைக்க, திறன்மிகு பாரதம் இயற்றப்பட, ஒவ்வொரு இளைஞனும் தனது பங்களிப்பை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்ள வேண்டும்.  தங்களது திறமையை, பாரதத்தின் திறமையோடு இணைக்க வேண்டும்.  எந்தப் பயணத்தை அடல் அவர்கள் தொடக்கி வைத்தார்களோ, அதை முன்னெடுத்துச் செல்லும் புதிய ஆனந்தம், புதிய மகிழ்ச்சி ஆகியவை கைகூடுவதை நம் கண்முன்னேயே நாம் காணலாம்.

எனதருமை நாட்டுமக்களே, மீண்டும் மனதின் குரலில் இணையலாம், அப்போது மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவோம். மிக்க நன்றி.

* தமிழாக்கம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்,  சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe