
ஐபிஎல் 11-வது சீஸனின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணியுடனான இறுதி ஆட்டத்தில் அதிரடி காட்டிய ஷேன் வாட்ஸனுக்கு “புதிய பெயர்” ஒன்றை செல்லப் பெயராக கேப்டன் தோனி வைத்துள்ளார்.
சூதாட்டப் பிரச்னைகள் காரணமான சர்ச்சைகளால், கடந்த 2 ஆண்டுகள் தடை முடிந்து தோனி தலைமையிலான சென்னை அணி, மீண்டும் களம் இறங்கியது. தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களான அஸ்வின், கார்த்திக் உள்ளிட்ட எந்த வீரர்களும் இல்லையாயினும், சென்னை அணிக்கு ரசிகர்கள் தோனி என்ற ஒரே காரணத்தாலேயே பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் அளித்து சிஎஸ்கே இந்த முறை பட்டம் வெல்லும் என அடித்துக் கூறினர்.
அவ்வாறே சென்னை அணியும் கடைசிக் கட்டம் வரை அதிரடி காட்டி லீக் ஆட்டங்களில் பட்டையைக் கிளப்பியது. ப்ளே ஆஃப் ஆட்டத்திலும் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி, துவக்க வீரர் வாட்ஸனின் அபார சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த இறுதிப் போட்டியில் முதல் 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்த 41 பந்துகளில் சதம் அடித்து வெற்றி வீரராக ஜொலித்தார் வாட்ஸன். மிரட்டலான இவரது சதத்தால் வேறு எவரும் விளையாட களத்துக்கு இறங்க வேண்டிய தேவை இல்லாமல் போனது. சிக்ஸர் மழை பொழிந்து அசத்தலான ஆச்சரியமான அழகு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஷேன் வாட்ஸனின் ஆட்டத்தை சென்னை அணி கேப்டன் தோனியும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கான தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கையில் வெற்றிக் கோப்பையையும், தனது மகள் ஸீவாவையும் வைத்துக்கொண்டு தோனி தனது மனைவி சாக்ஸியுடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வாட்ஸனுக்கு ஷாக்கிங் ஷேன் வாட்ஸன் என்று ஷாக் ஆனதாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்..
அவரது கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள்நிறத்தில் மாறி எங்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. ஷேன் ”ஷாக்கிங்” வாட்ஸன் அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது..
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்ஸன், தோனி தனக்குச் சூட்டியுள்ள பெயரை ரசித்து வரவேற்றுள்ளார். அடுத்த நாள் மதியத்துக்குள் இந்தப் படம் 22 லட்சம் லைக்குகளைப் பெற்றது.




Cute