ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். டெல்லியிலிருந்து இன்று புறப்படும் பிரதமர், முதலாவதாக ருவாண்டாவுக்கு செல்கிறார். இதன்மூலம், ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
ருவாண்டா அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ருவாண்டா அதிபரின் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ‘வீட்டுக்கு ஒரு பசு’ திட்ட விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
அந்நாட்டின் பாரம்பரிய மரபுகளின்படி, பசு மாடுகளை பரிசாக அளித்து அன்பை ஏற்படுத்தி கொள்வது வழக்கம். அவ்வகையில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் 200 பசு மாடுகளை ருவாண்டா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார். பின்னர் 24-ம் தேதி உகாண்டா நாட்டுக்கு செல்கிறார்.
அந்நாட்டு அரசுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இதனைத் தொடர்ந்து, உகாண்டாவுக்கு நாளை செல்கிறார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, உகாண்டாவுக்கு செல்லும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர், இருதரப்பு நாடுகளின் வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன்பின் பயணத்தின் இறுதியாக தென் ஆப்பிரிக்காவுக்கு நாளை மறுதினம் செல்கிறார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார்.



