திருவனந்தபுரம்: ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்தபோது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டனராம். இந்நிலையில், பிஷப் ப்ரான்கோ அப்பாவி, ஒன்றுமறியாதவர் என்று மிஷனரி கொடுத்த நற்சான்று, கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பிஷப்பால் பாதிக்கப்பட்ட கன்யாஸ்த்ரிகள் 18 பேரும் போர்க்கொடி உயர்த்தி, போராட்டம் செய்தனர். இதற்கு, அவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் வெளிசக்திகள் தூண்டுதலால் அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் 18 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ள மிஷனரிகள், பிஷப் பிராங்கோவுக்கு கைகொடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் பிராங்கோ மீது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்கார குற்றச்சாட்டை அளித்தார். இந்த பரபரப்பான புகாரை வைக்கம் காவல்துறை அதிகாரி சுபாஷ் விசாரித்து வருகிறார். இது குறித்து கன்னியாஸ்திரியின் உறவினர்களிடம் விசாரித்த போது பிராங்கோ தங்களையும் அவர் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகார் அளித்த கன்னியாஸ்திரி, “ஆர்ச் பிஷப் பிராங்கோ என்னை 2014 முதல் 2016 வரை 13 முறை பலாத்காரம் செய்துள்ளார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மன ரீதியாக சித்ரவதை செய்து என்னை பலாத்காரம் செய்தார். நான் இந்தப் பிரச்னையை சபைக்குள்ளேயே தீர்க்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. சபையைச் சேர்ந்தவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவேதான் நான் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.
கேரள மாநிலம் கொச்சியில் சமீபத்தில் நடந்த பிஷப்புகள் மாநாட்டில் போப் ஆண்டவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துக் கொண்டார். இதே புகாரை அவரிடமும் நான் அளித்துள்ளேன். எனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் குடும்பத்துடன் காலடியில் வசித்து வருகின்றனர். பிஷப்புக்கு ஆதரவான ஒரு பாதிரியார் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
என்னை மட்டும் அல்லாமல் மேலும் பல கன்னியாஸ்திரிகளையும் பிஷப் பிராங்கோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிராங்கோவின் பாலியல் கொடுமை தாங்க இயலாமல் இதுவரை 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டே ஓடி விட்டனர். அதனால் இதுவரை 5 மடங்கள் மூடப்பட்டுள்ளன… என்று கூறினார்.
கன்யாஸ்த்ரியின் இந்தக் கண்ணீர், கேரள மக்களிடம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஷப் பிராங்கோவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்து வருகின்றனர்.





