கொச்சி: கன்யாஸ்த்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட பழி தீர, தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் கூறுவதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முல்லேகல் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். அவருடன் இந்த பிஷப்பால் பாதிக்கப் பட்ட சக கன்னியாஸ்திரிகளும் கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், அரசு விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தில்லி வாடிகன் தூதரக இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பிஷப் பிராங்கோ மறுத்து செய்தி வெளியிட்டார். இருப்பினும் பிஷப் பிராங்கோவுக்கு ஆதரவாகவே சர்ச் நிர்வாகமும் மிஷனரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ ஆசைகாட்டினார் என்று, பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
பிஷப் பிராங்கோ முல்லேகல் மற்றும் பாதிரியார்கள் இருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொள்ள வலியுறுத்தி, அதற்காக ரூ.5 கோடி தருவதாக வாக்களித்தனராம்.
இதனிடையே, கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப்புக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து, போலீஸாருக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வாட்டிகன் தூதரகத்துக்கும் கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதினர். ஆனாலும் பிஷப் பிராங்கோ தனது பண பலத்தை பயன்படுத்தி வழக்கிலிருந்து தன்னை பாதுகாத்து வருவதாகவும் இந்தியாவில் உள்ள மத குருமார்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொள்வோர், தவறு நடதால் தட்டிக் கேட்காமல் விடமாட்டோம் என நியாயவாதம் பேசுவோர் எல்லாம் கேரள வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள் போலும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.




