சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது” என குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் ஒரே கருத்தை கொண்டிருந்தனர். நீதிபதிகள் சந்திரசூட், நாரிமன் ஆகியோர் சில கருத்துகளில் முரன்பட்டாலும் இறுதி முடிவு ஒன்றாக இருந்த காரணத்தால், தலைமை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர்.
சபரிமலை தீர்ப்பில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில் இடம் பெற்ற ஓரே பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டுமே.நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
சபரிமலையில் பெண்கள் செல்வது ஏற்புடையதல்ல. ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுப்பூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது என நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.



