ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது

புது தில்லி:
ரயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு முன்பதிவின்போது அரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. இனி இந்த வசதி கிடையாது. அரை டிக்கெட் பெற்று வந்த சிறார்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முழு டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு முழு டிக்கெட்டே வழங்கப்படும். இதற்கான திருத்தம் முன்பதிவுக்கான விண்ணப்பப் படிவத்தில் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.

அதேநேரம் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிப்போர், 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இந்திய ரயில்வே துறை சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.