அரியானாவில் ஹரித்வார் எக்ஸ்பிரஸ் விபத்து: ஓட்டுநர் பலி

பால்வால்: அரியானாவில் லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் மோதியதில் ரயில் ஓட்டுனர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அரியானா மாநிலம், பால்வால் மாவட்டம், பபோலா கிராமம் அருகே லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புறநகர் ரயில் ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் மின்சார ரயில் உதவி ஓட்டுனர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு ஆகியோர் படுகாயமடைந்தனர். அதிக பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரயில் ஓட்டுனர் சிக்னலை கவனிக்காமல் வந்துள்ளார் என தெரிகிறது. பால்வால் ரயில்வே நிலையத்தில் சிக்னல் கிடைத்ததால் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ஆனால் பனியின் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக சென்றதாக தெரிகிறது. அப்போது வந்த புறநகர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே துறை சார்பில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ரயில் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.