
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தங்கள் தீர்ப்பினை அளித்தது.
ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
முன்னதாக, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று, 2018 செப். 28ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன!
தற்போது, கார்த்திகை மாத விரத காலம் வரும் நவ.16ம் தேதி தொடங்குவதால் உச்ச நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த வருடம் நிகழ்ந்தது போலவே இந்த வருடமும் அரசியல் களேபரங்கள் நிகழுமா என்பது குறித்தும் சந்தேகங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், இன்று காலை நீதிபதிகள் அனைவரும் தீர்ப்பில் கையெழுத்திட, தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அதில், சபரி மலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்யப் படுகிறது, என்றும், 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வந்துள்ளதால் அமர்வு மாற்றம் என தகவல் தெரிவிக்கப் பட்டது.
நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், டிஒய் சந்திரசூட் ஆகியோர், சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
அதே நேரம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி இந்து மல்ஹோத்ரா, கன்வில்கர் ஆகியோர், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
இதை அடுத்து, சபரிமலை விவகாரத்தில், பெண்கள் அனுமதிக்கப் படுவது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இது மாற்றப் படுகிறது.
இந்த வழக்கின் பிரச்னை, பொதுவானதாக மாற்றிக் கொள்ளப் பட்டுள்ளது. பிரச்னை, சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்வது என்பது குறித்தானது அல்ல, இது, இஸ்லாமியர்களின் தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவது தொடர்பான உரிமை, பார்சி பெண்கள் அவர்களது மதக்கடமையை மேற்கொள்வது தொடர்பான மகளிர் உரிமைப் பிரச்னை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார் தலைமை நீதிபதி.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில்… தனிப்பட்ட உரிமைக்கும், மத வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு இது. இந்தத் தீர்ப்பு இந்துப் பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. இஸ்லாமியப் பெண்கள் தர்காவுக்குள் அனுமதிக்கப் படுவது, பார்ஸி பெண்களின் மத வழிபாட்டு உரிமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களைக் கருத்தில் கொண்டோம்.
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள், இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இது மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் நிலையே தொடரும் என்று தெரியவருகிறது. எனவே இந்த வருடமும் பெண்களை சபரிமலைக்குள் செல்ல திணிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது, அதைத் தடுக்க இந்து இயக்கங்கள் கைகோப்பது என்பன போன்ற அரசியல் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.