திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறினார். இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இது அனைத்துக் கட்சிக் கூட்டமா அல்லது கம்யூனிஸ்ட்களின் கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பொலிட் பீரோவா என கேள்வி எழுந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்துக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அந்தத் தீர்ப்பை தாங்களே கேட்டுப் பெற்றது போல், ஆவேசமாக தீர்ப்பை அமல்படுத்த உடனடி நடவடிக்கைகளில் இறங்கியது மாநில கம்யூனிஸ்ட் அரசு. அதன் நடவடிக்கைகளும் வேகமுமே மாநில அரசுக்கு உள்நோக்கம் இருப்பதை பகிரங்கப் படுத்தியது.
இந்நிலையில், எப்படியாவது இளம் பெண்களை, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, எந்த மதத்தினராய் இருந்தாலும் சரி என்று அடம் பிடித்து, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்துக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இந்து மத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுடன் ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் இதனால் திகைத்தார்கள். அவர்கள் எந்த விதப் போராட்டமும் நடத்தாமல், அவர்களது நம்பிக்கையை தாங்களே சிதைத்துக் கொண்டு அரசு செயல்படுத்துவதை அப்படியே வழிமொழிய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், அதை எதிர்த்து போராடும் போது, பாஜக., வன்முறையைத் தூண்டுகிறது என்று கதறுகிறது மாநில அரசு.
இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சிலர் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமும் உடனடியாக விசாரிக்க மாட்டோம் என்றும், ஜனவரி மாதம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் எல்லாம் முடிந்த பின்னர் ஜன.22ல் விசாரிக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை, மக்கள் எண்ணத்துக்கு விரோதமாகவும் பாரபட்சத்துடனும் அது கருத்து தெரிவித்ததாகவே பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு அனுமதி என்பதை தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியதால், மாநில அரசு, எப்படியாவது அதை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதனால், இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் பினரயி விஜயன்.
குறிப்பாக, நாளை மாலை, கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. இதனால் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் கேரளத்தை ஆளும் பிணரயி விஜயன். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ.க, உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டன.ர் ஆனால், பிணரயி விஜயனின் பிடிவாதத்தால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயன் பேசிய போது, செப்.,28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கம். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
இந்த முடிவை அறிவித்து, தீர்ப்பை அமல்படுத்துவதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்காக என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர், இது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முடிவை அறிவிக்கும் பொலிட் பீரோ கூட்டம் என்று பிணரயி விஜயன் நினைத்துவிட்டார் போலிருக்கிறது என்று குற்றம் சாட்டினர். அதற்கு ஏற்ப காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.