புத்தாண்டு கொண்டாட ராகுல் ஐரோப்பா பயணம்

புதுதில்லி,

புத்தாண்டு கொண்டாட, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பா செல்வதாகக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் தனது 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி, ஐரோப்பா செல்கிறார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் தெரிவித்தது: ‘சில நாள் பயணமாக நான் ஐரோப்பா செல்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் பிரியமானவர்களுக்கும் மகிழ்வும், சந்தோஷமும் புத்தாண்டு கொண்டு வரும் என நான் நம்புகிறேன்’

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராகுல் ஓய்வில் வெளிநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சி திடீரென அறிவித்தது. நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளாமல் அவர் வெளிநாடு சென்றது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரசார் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவர் எங்கிருக்கிறார்? என்பது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், 57 நாட்களுக்குப்பின் ஏப்ரலில் அவர் நாடு திரும்பினார். அவர் பாங்காக் சென்றிருந்ததாக கட்சியினர் பின்னர் தெரிவித்தனர். பின்னர் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். இது தொடர்பான படங்களையும் அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
தற்போது இந்த ஆண்டில் தனது 3 ஆவது பயணத்தை அவர் அறிவித்துவிட்டுச் செல்கிறார்.