சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர், சபரிமலைக்கு சுற்றுலா செல்ல முயன்ற பெண் போராளிகளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இது சுற்றுலா தலமல்ல என்று அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை தடுக்க இயலாத கேரள அரசு, காட்டுமிராண்டித் தனமாக, அவர்களின் வாகனங்களை அடித்து உதைத்து, பெரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது போன்ற கலவரக் காட்சியைக் காட்ட முனைந்தது.
இதை அடுத்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. சாதாரணமாக சாலையில் நடந்து சென்ற பக்தர்களைக் கூட போலீசார் தடியால் அடித்து தாக்கினர். போலீஸாரின் கெடுபிடியால் சபரிமலைக்கு வரும் பக்தர்களீன் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பக்தர்கள் சரணகோஷம் போடக் கூடாது, 6 மணி நேரத்துக்கு மேல் சபரிமலை தேவஸ்தானத்தில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கடுமை காட்டிய போலீஸார், அதை மீறி அங்கே தங்கியவர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். தொடர்ந்து கேரள உயர் நீதிமன்றம் இது குறித்த வழக்கை விசாரித்து வருகிறது. அப்போது, சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், பக்தர்களிடம் அதிக கெடுபிடி காட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சபரிமலையில் கிரிமினல்கள் தான் பிரச்னை செய்தனர். போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை. பிரச்னை செய்த கிரிமினல்கள்தான் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், வசதிக் குறைவு காரணமாகவே சபரிமலையில் இருந்து நிலக்கல்லுக்கு முகாம் மாற்றப்பட்டது என்றும், இந்த நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
கேரள அரசின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கிரிமினல்களா என்று கேரள அரசுக்கு பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். செங்கொடிக்கு ஜே போடுபவர்கள் அமைதியானவர்கள், ஆனால் சரணகோஷம் போடுபவர்கள் கிரிமினல்கள் என்ற வகையில் கேரள அரசு கூறியிருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள பலரும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.