
புது தில்லி : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது.
அண்மையில் பணி ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேலின் பணியை ஓராண்டு நீட்டிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு வியாழக் கிழமை இன்று விசாரணைக்கு வந்த போது, சிலை கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டதாகவும், ஓய்வுபெற்ற அதிகாரியை பணி நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது எப்படி சரியாகும் எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல்தடுப்பு பிரிவு ஐஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது செல்லும் என அது உத்தரவு பிறப்பித்தது.