ஒன்றரை மணி நேரம்… விட்டு விளாசிய நரேந்திர மோடி! காங்கிரஸ் என்ற அழிவு சக்தியை தோலுரித்துக் காட்டி காட்டமான பேச்சு!

புது தில்லி: தில்லியில் நடக்கும் பாஜக, தேசிய செயற்குழுவின் 2ஆவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!

செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக., தலைவர்கள் அனைவருக்கும் தனது வந்தனங்களைக் கூறினார் மோடி. குறிப்பாக., லால்கிஷண் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூத்த தலைவர்களுக்கும் தனது வந்தனங்களைக் கூறிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லாமல் நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இது என்றும், அவரின் அயராத பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல நாம் அசராமல் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மோடி, மக்கள் தான் பாஜக.,வின் பலம். நம்மைப் பொறுத்தவரை முதலில் நாடே முக்கியம். பிறகே கட்சி எல்லாம் என்று தெளிவாகக் கூறினார்.

நம் இச்சா சக்தி, கர்ம சக்தியாக உருப்பெறுகிறது. நாம் நினைப்பது, செயல்களாக வருகிறது. பாஜக., அதை செயல்படுத்துகிறது. பெண்கள், விவசாயிகள் அதிகாரம் பெறவும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாஜக., உழைத்துவருகிறது. தேசத்தை பாஜக., உச்சத்திற்கு எடுத்துச் செல்லும். மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை நாம் வழங்கியுள்ளோம்.

கடந்த காலங்களில், நாட்டை காங்கிரஸ் சீரழித்தது. 2004-14 வரை ஊழல் மட்டுமே நடந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்தனர். ஆனால், நாம் நாட்டை இருளில் இருந்து மீட்டுள்ளோம்.

நேர்மையான ஆட்சி என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. அதனை நாம் நனவாக்கியுள்ளோம். இந்த நாட்டு மக்களுக்கு அதை நாம் நனவாக்கிக் காட்டியுள்ளோம். மக்களின் வரிப்பணம் நேர்மையாக செலவு செய்ததை உறுதி செய்துள்ளோம். நம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை . நேர்மையை நோக்கி நாடு செல்கிறது. இதனை பாஜக., முன்னெடுத்துச் செல்கிறது.

நாம் அனைத்து சமுதாயத்தினரையும் சமமாக நடத்தியுள்ளோம். இட ஒதுக்கீடு முறை இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஏழை குடிமக்கள் மத்தியில் இட ஒதுக்கீடு மசோதா நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

சம வாய்ப்பு தேவை. இவற்றில் வேறுபாடு கூடாது என்பவையே இன்றைய முக்கியத் தேவை. இடஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் குறித்து தொண்டர்கள் மக்களிடம் விளக்க வேண்டும். தற்போது நிறைவேற்றப் பட்டுள்ள புதிய மசோதா அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடாது. ஆனால், பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

இந்த அரசு தங்களுடன் இருப்பதை அனைத்து இளைஞர்களும் உணர்ந்துள்ளனர். இளைஞர்களே நமது பலம். அவர்களை ஆதரிப்பது தொடரவேண்டும். தொடரும்!

விவசாயிகள் நலனுக்காக நமது அரசு கடுமையாக உழைத்துள்ளது. முயற்சி செய்துள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகளை காங்கிரஸ் வெறும் வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்திக் கொண்டது. ஆனால், நாமோ 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் விவசாயிகளுக்காக போராடுவது தொடரும். பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதனை நாம்தான் செய்துள்ளோம். 95 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளோம்.

வாஜ்பாய் கண்ட கனவை இந்த அரசு நனவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஊழலற்ற இந்தியாவை அவர் கனவு கண்டார் நாம் அதனை நனவாக்கி வருகிறோம்

வாஜ்பாய் அரசைத்தான் நாம் நடத்தி வருவது!
வளர்ச்சி என்பது நமது மூல மந்திரம்! சப்கா ஸாத் சப்கா விகாஸ்! ஏக் பாரத் ச்ரேஷ்ட பாரத்! ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை நோக்கியே நமது செயல்பாடுகள் அமைந்துள்ளது.

பாஜக., ஆட்சியில் சுய உதவிக் குழுவினர் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்க்கட்சிகள் குறை கூறின. எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை விரைவு படுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் அரசோ, தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தவே விரும்பியது. குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்தவே காங்கிரஸ் விரும்புகிறது.

நாம், இதுவரை நிறைவேற்றிய திட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸைப் போல், எந்த திட்டத்திலாவது எனது பெயர் சூட்டியுள்ளேனா? அல்லது சுய தம்பட்டம் அடித்துள்ளேனா?

இந்தியாவின் நிலையை நமது பாஜக., அரசுமாற்றி உள்ளது. புதிய பாதை அமைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் பொது மக்களின் பணம் தனியார் சொத்துகளாக மாற்றப்பட்டன. மோசடி நபர்களுக்கு கடன் வழங்க காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி அளிக்கப்பட்டது. கணக்கில்லாமல் கடன்கள் கொடுக்கப்பட்டன. அவற்றால் ஏற்பட்ட ஊழல்களால், நமது நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அதற்காகவே இப்போதும் மகா கூட்டணி அமைக்கிறது காங்கிரஸ். கூட்டுக் கொள்ளை. அதனால்தான் மகா கூட்டணி என்பது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை உணர்த்தவேண்டும். சொந்த வாக்காளர்களையே காங்கிரஸ் அவமானபடுத்தியது.

2ஜி , நிலக்கரி ஊழல் போன்றவை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகவே அடுத்த முறை ஆட்சி அமைக்க வேண்டும், தாங்களே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும், நிலையாக தாங்களே ஆட்சியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் கைகோத்துள்ளனர். கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் இந்தக் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி நீதித்துறை நடவடிக்கைகளில் இடையூறு செய்கிறது. ராமர்கோயில் விவகாரத்திலும் காங்கிரஸால் தாமதம் ஏற்படுகிறது…

நாம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். யுவ சக்தியின் மூலமாக, திறமைகள் மூலமாக யுவசக்தியை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம்.

இங்கே ஒரு பொதுவான நடைமுறை உள்ளது. காமன் பிராசஸ். அதுதான் காங்கிரஸ் ப்ராசஸ். அது, ஊழலை, ஒருதலைப்பட்சத்தை, ஒருதரப்புக்கு சாதகத்தை, ஜாதி மத வேறுபாடுகளை, பிரித்தாளும் சூழ்ச்சியை, இந்திய நலனில் சமரசம் செய்துகொள்வதைக் கொண்டது.

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த காமன் பிராசஸ்களை , இந்த நடைமுறைகளை மாற்ற்றியுள்ளோம். அதனை இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்…. என்றார் மோடி.

மோடி சுமார் ஒன்றரை மணி நேரம் அலுக்காமல் சலிக்காமல், நின்று கொண்டே, துடிப்புடன் உரை நிகழ்த்தினார். பாஜக.வினருக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் ஆச்சரியத்தையும், ஒரு மனிதனின் கடின உழைப்பையும், நினைவாற்றலையும் வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுத்தியதாய் அமைந்தது மோடியின் உரை!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.