பாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள்! கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi bjp coucil - 2026

உழைப்பின் சக்தியும், பக்தியும் கொண்டதுதான் கேரளா என்று கேரளத்தைப் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, பாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடைபோடாதீர்கள் என்று ஆளும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கேரள மாநில பாஜக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கேரளத்தின் கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பல்வேறு காரணங்களுக்காக நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்கு மாற வேண்டும் என பாஜக விரும்பியது. எனவே தான் பிரகதி திட்டத்தின் மூலம் அனைத்து நலத்திட்டங்களும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கிய பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலகெங்கிலும் உள்ளவர்களை கடல்பகுதி மற்றும் கலாச்சாரம் மூலமாக கேரளா வரவேற்கிறது. கடின உழைப்பிருந்தால் அனைத்தும் சாத்தியப்படும் என்பதை கேரளா நிரூபித்துள்ளது. இங்கு சக்தியும் உள்ளது, பக்தியும் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தர வரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இடதுசாரியும், காங்கிரஸும் பெயரளவில் தான் வெவ்வேறு! ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் தான். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்!

இவ்வாறு பேசிய மோடி, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

பாஜக., நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மட்டமாக எடைபோட்டு விடாதீர்கள். உங்கள் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் எந்நாளும் பாஜக., நிர்வாகிகளின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடாது. இதை நீங்கள் திரிபுராவில் பார்த்திருப்பீர்கள்.

பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு வந்திருக்கிறது பாஜக., திரிபுராவில் கண்ட அதே போன்ற காட்சியை நீங்கள் கேரளத்திலும் காண்பீர்கள் என்று கூறினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.