காங்கிரஸ் அரசின் ஒப்பந்த விலையை விட மோடி அரசு 2.8% குறைவாகவே ரஃபேலுக்கு கொடுத்துள்ளது!:சிஏஜி அறிக்கை!

புது தில்லி: ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேசி நிர்ணயித்த விலையை விட மோடியின் தலைமையிலான தே.ஜ.கூ., அரசு 2.8% குறைந்த விலையிலேயே ஒப்பந்தம் செய்துள்ளது என்று மத்திய கணக்குத் தணிக்கை வாரிய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது ராகுலுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே கருதப் படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் இன்று மாநிலங்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்..

பாஜக., ஆட்சியில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு பதிலாக, 2.86 சதவீதம் குறைவான விலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் போடப்பட்ட 126 முழுமையடையாத வெறும் போர் விமானங்களுக்கு பதிலாக, பாஜக., தலைமையிலான அரசால், முழுதும் கட்டமைக்கப்பட்ட அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட முழுமையடைந்த 36 விமானங்கள் உடனடியாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு 17.08 சதவீதம் தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கத் தயாராகும் இறுதி நிலை பிளை-அவே விலை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த அளவே இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

126 போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்ததை விட, தற்போதைய ஒப்பந்தத்தில், முதல் கட்டமாக 18 ரபேல் போர் விமானங்கள் 5 மாதங்களில் விநியோகம் செய்யப்படும் – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒப்பந்தப் புள்ளி விவரங்கள், விலை விவரம் உள்ளிட்ட நுணுக்கமான ரகசியத் தகவல்கள் எதுவும் இன்று அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மேலும், ஒப்பந்தப் புள்ளி விவரங்களில், ஏற்கெனவே இந்த விமானம் ஒப்பந்தப் புள்ளி விவரங்கள் கேட்பின் போது போட்டியிட்ட முக்கிய இரு விமான நிறுவனங்கள், மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட 6 விமான தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த ஒப்பீட்டு விவரங்களை சிஏஜி அறிக்கையில் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சிஏஜி அறிக்கை குறித்தும் மிக மோசமான விமர்சனத்தை ராகுல் நேற்று முன்வைத்தார். 2016ல் இந்த ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட்ட போது, நிதிச் செயலராக இருந்த ஆடிட்டர் ராஜீவ் மெஹ்ரிஷி குறித்து அதிருப்தி வெளியிட்ட ராகுல், அவரது அறிக்கை நடுநிலையாக இருக்காது என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களும் போராட்டம் நடத்தினர்.

இருப்பினும், அந்த அமளிக்கு இடையே, மாநிலஙக்ளவையில் பொன்.ராதாகிருஷ்ணன் 141 பக்கங்கள் கொண்ட சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...