பாஜக., சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடையின் வண்ணம் குறித்துப் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உ.பி., முன்னாள் அமைச்சர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உ.பி., மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டி யிடுகிறார். இவர் முன்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் சேர்ந்தார்.

இதே தொகுதியில் அவரை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம்கான் போட்டி இடுகிறார். இவர் உபி., மாநில முன்னாள் அமைச்சர்.

ஏற்கெனவே, நடிகை ஜெயப்ரதாவை ஆசம்கான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது தரங்கெட்ட விமர்சனத்துக்காக, சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தின் போது மேடையிலேயே ஜெயப்ரதா அழுதார். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஏப்.14 ஞாயிற்றுக் கிழமை நேற்று ராம்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஆசம்கான், கடந்த 10 ஆண்டாக ஒருவர் ராம்பூர் மக்களின் ரத்தத்தை குடித்தார். அந்த நபரை ராம்பூருக்கு அறிமுகப்படுத்தியது நான் தான். அவரது விரலைப் பிடித்து நான்தான் அழைத்து வந்தேன். ராம்பூர் முழுவதும் அவரை நான் பிரபலமாக்கினேன். அவரை யாரும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டேன். அவரை 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள். அவரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி நிற உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாளிலேயே நான் தெரிந்து கொண்டேன் என்று பேசினார்.

இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், ஜெயப்பிரதா மீண்டும் கண்கலங்கிய குரலில் ஆசம்கான் குறித்து புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஆசம்கானை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகத்தில் என்ன நடக்கும்? பெண்களுக்கு சமூகத்தில் இடமிருக்காது. நான் இந்தப் பேச்சுகளுக்காக பயந்துபோய் ராம்பூரை விட்டு சென்று விடுவேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் இங்கிருந்து அப்படியெல்லாம் போய்விட மாட்டேன். நான் செத்துப் போனால் நீங்கள் திருப்தி அடைவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை அடுத்து, ஆசம்கானின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆசம்கான் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான இந்தப் பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய மகளிர் ஆணையம் ஆசம்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...