மக்களவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்டத் தேர்தலில், இன்று கேரளத்திலும் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் இந்திரம் திடீரென கடமுடவென ஆடியது. அதிலிருந்து சத்தம் வெளிவந்ததால், சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், வாக்குப் பதிவு சலசலப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது ஒருவர், தான் வாக்களித்துவிட்டு, தான் அழுத்திய பட்டனுக்கு ஏற்ற சின்னம் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தெரிகிறதா என்று பார்க்க அந்த இயந்திரத்தை உற்றுப் பார்த்தார். அப்போது அதில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பாம்பை பார்த்த பயத்தில் அவர் போட்ட அலறலில், வெளியே வாக்களிக்க வரிசையில் இருந்த வாக்காளர்களும், தேர்தல் அறையில் இருந்த அலுவலர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதன் பின்னர் போலீசார் வந்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் இருந்த பாம்பை வெளியே எடுத்தனர். அந்தப் பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடர்ந்தது.
பாம்பின் காரணத்தால், வாக்குப்பதிவில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது.




