செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கை

  திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பலியான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போர்க்குரல் எழுப்பியுள்ளன. நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஆந்திர மாநில போலீசார் கலக்கத்தில் உள்ளனர். எனவே கடத்தல்காரர்கள் முன்னை விட தீவிரமாக செயல்படக்கூடும் என ஆந்திர வனத் துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில், தங்கள் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களைப் பாதுகாக்கவும், கடத்தல்காரர்களின் தாக்குதலில் இருந்து அதிரடிப் படையினரைப் பாதுகாக்கவும் விரிவான திட்டத்தை ஆந்திர மாநில போலீசாரும் வனத்துறையினரும் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர். இதன்படி செம்மரக்காடுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இஸ்ரோவின் உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வனப்பகுதியில் பொருத்த்தவும், அதன் மூலம் இருட்டிலும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை வனப்பகுதி மற்றும் செம்மரக்கட்டை குடோன்களில் பொருத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றைக் கண்காணிக்க திருப்பதியை மையமாகக் கொண்டு கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. மேலும், அதிரடிப்படையைப் போல சிறப்புச்செயற் படையும் அமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், கடத்தல்காரர்கள் பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் வழங்கப்படும். இதன் மூலம் எந்தக் கடத்தல் குழு வனத்துக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையினரின் சிறப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க வழிசெய்யப்படும். ஏற்கெனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, அதன் மூலமே தப்பிய கடத்தல்காரர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள்.