மேற்கு வங்கத்தில் இப்போது சிலை அரசியல் தலை தூக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வன்முறைகள் அதிகம் நடைபெற்ற ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர் படை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதைக் கண்டு செய்வதறியாமல் திகைக்கிறது தேர்தல் ஆணையம்.

மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திலும், பாரபட்சம் காணப்பட்டது. தேர்தல் ஆணையம் வேறு வழியின்றி, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளது. இதனை மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடைசிக் கட்டத் தேர்தலின் பிரசாரம் இன்று நிறைவுபெறுகிறது. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், பயங்கரவாதிகளை கொன்றழித்தவர்கள் யார்?., தங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என முழங்கினார்.

உத்தரப் பிரதேசத்தின் மாவ், சந்தோலி, மிர்ஸாபூர், மேற்கு வங்கத்தின் மதுராபூர், டம் டம் ஆகிய இடங்களில் இன்று ஒரே நாளில் ஐந்து இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், கடந்த மாதம் வரை தன்னை அகற்றியே தீருவதுதான் குறிக்கோள் என முழங்கிய கலப்பட கூட்டணியினர் நாளுக்கு நாள் பாஜக., வுக்கு பெருகும் ஆதரவைக் கண்டு கலக்கமடைந்துள்ளனர் என்றார்.

வெறும் 8 இடங்கள், 10 இடங்கள், 20 – 22 இடங்கள், 35 இடங்களை வைத்திருப்போர் எல்லாம் பிரதமர் ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார் மோடி.

கொல்கத்தாவில், பாஜக பேரணியின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டிப் பேசினார். மேலும், மேற்கு வங்க மக்களால் கொண்டாடப்படும் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப் பட்டதாகவும், அதே இடத்தில் மீண்டும் வித்யாசாகரின் சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

இதனிடையே, கொல்கத்தாவில் கலவரத்தால் சேதமடைந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை அமைக்க மேற்கு வங்க அரசிடமே போதுமான பணம் உள்ளது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாஜக., தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட கோல்கத்தா பேரணியில் பாஜக., திரிணமுல் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரம் ஆனது. அப்போது, மேற்கு வங்கத்தின் சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முன்னதாக உபி.,யில் இது குறித்து பேசிய பிரதமர் மோடி, அதே இடத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையை எழுப்புவோம் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு பதிலளிக்கு விதமாக, மந்திர் பஜார் என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ”சிலை அமைக்க எங்களிடமே போதுமான பணம் உள்ளது. நாங்களே ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையை அமைத்துக் கொள்வோம். பாஜக., வங்கத்தின் 200 ஆண்டு கால பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது. அவர்கள் திரிபுராவிலும் சிலைகளை உடைத்தார்கள். இங்கும் சிலைகளை உடைத்துள்ளார்கள். வங்க மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி தருவார்கள்,” என்றார்.

இப்போது சிலை அரசியல் மேற்கு வங்கத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேலும், உபி.,யில் பேசிய மோடி, பீகாரிகள் மற்றும் உத்தரப் பிரதேச மக்களை அன்னியர்கள் என்று குறிப்பிட்டு, மம்தா பானர்ஜி அரசியல் செய்ததை, உபி,யின் மாயாவதி கேட்டும் கேட்காதது போல் முகத்தை திருப்பிக் கொண்டு வாய் மூடிச் செல்கிறார். உண்மையில் மாயாவதி அதற்காக மம்தா தீதியிடம் பதில் கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார் மோடி.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...