
தமிழ் திரைப்பட உலகில் தொடக்கத்தில் நடன ஆசிரியராக தனது கலைப்பணியை துவங்கிய ராகவாலாரன்ஸ் அடுத்த கட்டமாக நடிகராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்து வெற்றியும் கண்டு வருகிறார். இதனையடுத்து பொதுச்சேவைகளில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தன்னால் முடிந்த அளவு ஏழை, எளியோருக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக
ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், திருநங்கைகள் என பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் ராகவா லாரன்ஸ்.
கடந்த வருடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசன் என்பவருக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.
ஆலங்குடி 515 கணேசன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர். இலவசமாக கார் சேவை செய்து வருபவர்.
5000க்கும் மேற்பட்ட சடலங்களை இலவசமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். 2000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு இலவசமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.
மேலும், சென்னை வெள்ளம், தானே புயல், ஒக்கி புயல் என இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு 15 லட்ச ரூபாயை தன் சொந்த செலவில் வழங்கியிருக்கிறார்.
கடந்த வருடம் கஜா புயலில் அவருடைய வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டு தரைமட்டமானது. பல பேருக்கு உதவி செய்த அவருடைய வீடு நிலை குறித்து தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது.
இதனை கேள்வி பட்ட ராகவா லாரன்ஸ் உடனடியாக ஆலங்குடி சென்று கணேசனுக்கு ஆறுதல் கூறி 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து புதிய வீடு கட்டும் வேலை நடந்தது. இன்று அந்த வீட்டின் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு புதிய வீட்டைத் திறந்து வைத்துள்ளார்.
தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறாராம் லாரன்ஸ்.
அது பற்றி அவர் கூறுகையில்,
“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள், தாய்மார்கள், முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சியாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.
மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15 நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.
காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள்தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன்.
குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்கிறார் ராகவா லாரன்ஸ்.



