ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய அடையாளங்களான சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பிஆர் அம்பேத்கர் ஆகியோருக்கு காங்கிரஸ் எப்படி மதிப்பளித்தது என்பது தெரிகிறதே என்று அவர் கூறியுள்ளார். பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து நாட்டை ஒருங்கிணைத்தவர். அம்பேத்கர் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டத்தின் மூலமான பாதுகாப்பை உறுதி செய்தவர் என்று கூறினார் வெங்கய்ய நாயுடு. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்ய நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், இத்தகையவர்களுக்கு நம் சமூகம் என்ன செய்தது? ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது? அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன? அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின? என்று கேள்வி எழுப்பிய நாயுடு, 1953ல் உஸ்மேனியா பல்கலை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸைச் சாடிய நாயுடு, எத்தனை காலத்துக்குத்தான் உண்மையை மூடி மறைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றும் விதம் குறித்துப் பேசிய நாயுடு, மத்திய அரசின் திட்டங்களான, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி, ஸ்வாச்ச பாரத் திட்டம், அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எல்லாம் சமூகத்தின் ஏழை மக்களின் வளர்ச்சிக்கானது என்று கூறினார்.
அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்?: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari