பொறுமை இழந்த ஜூனியர் என்டிஆர் இனி தாத்தாவின் நிகழ்ச்சிகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறினார்.
என்டி ராமராவின் பேரன்கள் தாரக், கல்யாண்ராம் இருவரும் காலையில் எழுந்து அஞ்சலி செலுத்துவதற்காக என்டிஆர் காட் அருகில் சென்றபோது அங்கே ஒரு பூ கூட இல்லை. பூக்களின் அலங்காரத்தோடு அழகாக திகழ வேண்டிய என்டிஆர் சமாதி களையிழந்து காணப்பட்டது! இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட பேரன்கள் பொறுமை இழந்தனர்! ஏற்பாடுகள் சரிவர செய்யப் படாததைக் கண்டித்தனர்!
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த நந்தமூரி தாரக ராமாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சமாதி அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதைக் கண்டதும் அவருடைய ரசிகர்களும் குடும்பத்தாரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.
பேரன்கள் தாரக் கல்யாண்ராம் இருவரும் தாத்தா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு செவ்வாய் அன்று விடிகாலை என்டிஆர் நினைவிடத்திற்குச் சென்றனர். அந்நேரம், சமாதியில் ஒரு மலர் கூட இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர்!
உடனே ஜூனியர் என்டிஆர் தன் ரசிகர்கள் மூலமும் பெரிய அளவில் ஏகத்துக்கும் மலர்களை வரவழைத்தார்! என்டிஆர் அபிமானிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமாதியை அலங்கரித்தனர்! பின் பேரன்கள் இருவரும் தாத்தாவின் சமாதியில் மலர்ச் செண்டுகள் வைத்து வணங்கினர்!
சற்று நேரம் அமைதியாக அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ஜெயந்தி ஏற்பாடுகள் சரிவர இல்லை என்று வருத்தம் அடைந்த ஜூனியர் என்டிஆர், இனி தாத்தாவின் ஜெயந்தி, நினைவு நாள் கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளை நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!




