
வங்கி கடன் வாங்கி கட்டமுடியாமல் வயநாட்டில் தற்கொலை செய்து கொண்டது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார்.
ராகுலுக்கு காரசாரமாக பினராயி பதில் கூறியுள்ளார்.
வயநாடு தொகுதிக்குட்பட்ட தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ராகுல் பினராயிக்கு எழுதிய கடிதத்தில், இப்பிரச்னையில் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2018 வெள்ள பாதிப்புகளை மனதில் கொண்டு பிரச்னை நிரந்தரமாக தீரும் வகையில் அரசு செயல்படவேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
கடந்த மே 31 அன்று வந்த கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்துள்ள பினராயி விஜயன், ” வயநாடு எம்.பி., கோரிக்கையை ஏற்று, கலெக்டரிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன்.
அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஆனால், வங்கிகள் வணிகக்கடன் தருவது, வசூலிப்பது குறித்து ‘சர்பேய்சி சட்டம்’ என்ற ஒன்று உள்ளது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இங்கு கேரளாவில் நாங்கள், விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
நாடுமுழுவதும் விவசாயிகள் கடன் பிரச்னையினால் தற்கொலை செய்வது அதிகரித்து வுருகிறது. எனவே, ராகுல் இப்பிரச்னையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
அங்கு நாங்கள் குரல் எழுப்பும்போது, ராகுலும் எங்களுடன் இணைந்துகொள்வார் என்று நம்புகிறேன்,” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் பினராயி, இப்படி டிவிட்டரில் பதிலடி கொடுத்திருப்பதால், அங்கு காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்குமான வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது.



