டிக்டாக் செயலியில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்த மனைவியை சடக்கென்று கொஞ்சமும் யோசிக்காமல் கத்தியால் குத்திக் கொன்றார் கணவர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ். கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நந்தினி எப்போதும் செல்போனிலேயே நேரத்தை செலவிடுவாராம். இந்நிலையில் இந்தத் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த ஓர் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நந்தினி தனியார் பொறியியல் கல்லூரியில் கூலி வேலையில் சேர்ந்துள்ளார்.
நந்தினி அடிக்கடி டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். அவருக்கு அதில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. மேலும், செல்போனில் அடிக்கடி யாருடனோ அவர் பேசி வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் பிரிந்திருந்த போதும், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நேற்று பிற்பகல் கனகராஜ், நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் நந்தினியின் செல்போன் பிஸியாகவே இருந்து,“நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறொருவருடன் பேசிக் கொண்டுள்ளார். நீங்கள் காத்திருக்கலாம் அல்லது பின்னர் அழைக்கலாம்” என்ற செய்தியே மீண்டும் மீண்டும் வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கனகரான், நந்தினி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சந்தேகம் அடைந்தார்.
தொடர்ந்து, ,நந்தினி பணியாற்றும் கல்லூரிக்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது நந்தினியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கனகராஜ். அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீசார் கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




