
மத்திய பிரதேசத்தில், தொடர்ந்து ஆறு மணி நேரம், ‘பப்ஜி’ எனப்படும், ‘மொபைல் போன்’ விளையாட்டை விளையாடிய, 16 வயது சிறுவன், மாரடைப்பால் இறந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஹாரூன் ரஷீத் குரேஷி. இவரது மகன் புர்கான் குரேஷி; பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறான்.
.மத்திய பிரதேசத்தில் உள்ள நீமச் என்ற இடத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, ஹாரூன் குரேஷி குடும்பத்துடன் சென்றார்.
அவரது மகன் புர்கானுக்கு, மொபைல் போன் விளையாட்டு மீது அதிக ஆர்வம். அதிலும், ‘பப்ஜி’ என்ற போரில் சண்டையிடும் விளையாட்டை, வெறி கொண்டு விளையாடி வந்துள்ளார்.
சாப்பிடுவது, துாங்கும் நேரம் போக, மற்ற நேரமெல்லாம், போனில் விளையாடுவதிலேயே கழிந்து வந்துள்ளான்.
இந்நிலையில், திருமணத்திற்கு தன் பெற்றோருடன் சென்ற புர்கான்,அங்கும், ‘பப்ஜி’ விளையாட்டில் மூழ்கியுள்ளான்.
மாலையில் துவங்கி, நள்ளிரவு வரை, தொடர்ந்து போனில் விளையாடி உள்ளான்.
பின், சில மணி நேரங்கள் மட்டும் துாங்கியவன். காலையில் எழுந்தவுடன், தொடர்ந்து விடாமல் ஆறு மணி நேரமாக, ‘பப்ஜி’ விளையாடி உள்ளான். அப்போது திடீரென மயங்கி விழுந்தவனை பெற்றோர் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
சிறுவன் புர்கானை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து,புர்கானின் தந்தை ஹாரூன் கூறியதாவது: ‘பப்ஜி’ விளையாட்டில் தோற்று விட்டார். அதையடுத்து, ‘விடாதே அடி…’ என கத்தியவர், அப்படியே மயங்கி, பேச்சு மூச்சின்றி சரிந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, இதய சிகிச்சை நிபுணர்,டாக்டர் விபுல் கர்க் கூறியதாவது:மொபைல் போனில் வரும் போரிடுவது போன்ற விளையாட்டுகளில், சிறுவர்கள் மனதளவில் ஒன்றி விளையாடுகின்றனர். ஒருகட்டத்தில், பரபரப்பும், உற்சாகமும் அளவுக்கு அதிகமாவதால், அதிர்ச்சியில் இதயம் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைகள், சிறுவர்கள் இது போன்ற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.’பப்ஜி’ விளையாட்டு, சிறுவர்கள் மத்தியில் வன்முறையை துாண்டுவதாகவும், அவர்களுடைய குணம் மற்றும் படிப்பை பாதிப்பதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, பல மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 16 வயது சிறுவன் மாரடைப்பால் பலியாகும் அளவுக்கு, விளையாட்டு வினையாகி இருப்பது, பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.



