2ஜி முறைகேடு: இறுதி வாதம் தொடக்கம்; மே 25க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்றுதுவங்கியது. இதன் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் இறுதி வாதம் ஏப். 15 ஆம் தேதி தொடங்கும் என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மார்ச் 24ஆம் தேதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை இறுதி வாதம் தொடங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தின் போது தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2ஜி கொள்கை முடிவு தொடர்பாக ஆ.ராசா அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை தவறாக வழிநடத்தினார். தனக்கு சாதகமான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்றபடி, அலைக்கற்றை ஒதுக்கீடு பெறத் தகுதியில்லாத ஸ்வான் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசைகளை ஒதுக்கினார் – என்று ஆ.ராசா மீது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். இதில் மேலும் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அவகாசம் கேட்டார்.ஆ.ராசா தரப்பிலும் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த கட்ட வாதம் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.