ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை’ விடுக்கப்பட்டது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆஜரானார். அவர் தனது வழக்குரைஞர் மூலம் தாக்கல் செய்த மனுவில், தன் கணவர் உள்ளிட்ட 6 பேரின் உடல்களை மருத்துவ நிபுணர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்தவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையையும், இறப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏப்.16 வியாழக்கிழமை தாக்கல் செய்யும்படி கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஸ்ரீநிவாஸூக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து, இன்றும் தொடர்ந்து அந்த மனு மீது விசாரணை நடக்கிறது. முன்னதாக, ஆந்திர மாநில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தானாக வழக்குப்பதிவு செய்து, ஹைதராபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆந்திர போலீஸாரிடம் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது. கொலை வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆந்திர போலீஸாரிடம் கேட்டது. மேலும், இதுகுறித்து சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்ட முனியம்மாளை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
ஆந்திர சம்பவம்: உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari