சந்திரபாபு நாயுடுவை ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டியது ஜகன் அரசு.
சந்திரபாபு நாயுடு வசித்துவரும் வீட்டின் மீது சி ஆர் டி ஏ அதிகாரிகள் “லிங்க மனேனி ரமேஷ்’ பெயரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள். ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படியும் இல்லாவிடில் காலி செய்யும்படியும் அதில் உள்ளது.
‘லிங்கமனேனி ரமேஷ்’ என்பவரின் கெஸ்ட் ஹவுசில் தான் நாயுடுகாரு வசித்து வருகிறார். தலைநகர் அமராவதியில் இதுவரை அவர் சொந்த வீடு கட்டிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கம் வீடு ஒதுக்கும் வரை வேறு வீட்டில் தங்குவதற்காக வீடு தேடிவருகிறார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் ஒரு அம்சமாக சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற பிரம்மாண்டமான அரங்கத்தை இடிப்பதற்கு முதலமைச்சர் ஜெகன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை இடிக்கும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்த அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள சொகுசு பங்களாவையும் இடிப்பதற்காக ஆந்திரா அரசு நேற்று நோட்டீஸ் ஒட்டியது.
பங்களாவின் உரிமையாளர் ரமேஷ் இல்லாத நிலையில் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் ஆறு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாவை சந்திரபாபு நாயுடு குத்தகைக்கு எடுத்து தங்கினார் …
இந்த பங்களா சட்ட அனுமதி இன்றியும் விதிகளை மீறியதாகவும் கட்டப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இந்த பங்களாவை இடிப்பதற்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.




