வலிமையான தலைமை என மோடியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் போது வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலொன்றையும் பாடினார்.

இதனை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான்  ”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பிரதமர் மோடியை தீர்க்கமான தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாராட்டியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பதிவின் தமிழாக்கம்:

”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு”

”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதுடன், தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலில் சிக்கியுள்ள நிலையில், ஒன்றுபட்டு, தனது சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே உகந்த தருணமாகும். நாட்டை வழிநடத்த தீர்க்கமான பார்வை கொண்ட தலைவர் அமைந்துள்ளது இந்தியாவிற்கு கிடைத்த நற்பேறு. 60 விழுக்காடு இளைஞர்களை கொண்ட இளமையான நாடாக இந்தியா திகழும் நிலையில், பாராட்டத்தக்க அம்சமாக இளைஞர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் போன்ற முன்னெடுப்புகள் சரியான திசையை நோக்கி பயணித்து வருகின்றன.

நினைவில் கொள்ளுங்கள், உங்களது மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவுமே சாத்தியமற்றது அல்ல. உறுதியாக, விடாப்படியாக முயற்சி செய்தலே முக்கியமானதாகும். சிறிய விடயங்களுக்காக உங்களது மனது பலவீனப்பட்டு போகும்படி விட்டுவிட வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். அவை உங்களது உள்ளுக்குள் நிகழக்கூடியது. உங்களின் அகவயமாக நிகழக்கூடிய இந்த போராட்டமானது, தெய்வீக வெளிப்பாடு போன்று தன்னை புறநிலையில் வெளிப்படுத்திக் கொள்ளும்.

இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ பெறுவது சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச்சிறந்த தரத்தினால் இது சாத்தியமாகியுள்ளதை காலம் நிருபித்துள்ளது. நமது திறமைகள் மூலம் நம்மைநாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம்.”