மகளுடன் கோயிலுக்கு வந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி!

அமெரிக்க கோவிலில், மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று ரஜினிகாந்த் சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்ததும், ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருடைய உடல்நிலை பற்றி வதந்திகள் பரவின.

சென்னையில் நடந்த ‘கபாலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளாததால், கடந்த ஒரு மாத காலமாக அவரை பற்றிய வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன.

இந்த வதந்திகளை அவருடைய குடும்பத்தினர் மறுத்தார்கள். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், அவர் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறினார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள ஒரு கோவிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று சாமி கும்பிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் வெர்ஜினியா என்ற இடத்தில், ரஜினிகாந்தின் குரு சச்சிதானந்த சாமிகள் கோவில் உள்ளது. அங்கு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று சாமி கும்பிட்ட படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார்? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.