இந்திய டிவி., சேனல்கள் ஒளிபரப்புக்கு பாகிஸ்தானில் தடை!

இஸ்லாமாபாத்:

டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடைவிதித்துள்ளது.

இந்திய சேனல்களில் ஒளிபரப்பப்படும் படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பாகிஸ்தான் மக்களிடையே வரவேற்பு அதிகம்.

இந்நிலையில், பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்திய சேனல்களுக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஆணையத் தலைவர் அப்சர் அலாம் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதன்படி, அக்டோபர் 15ம் தேதி வரை இந்திய சேனல்கள் தங்களது ஒளிபரப்பை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15க்கு பின்னர், வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றிருக்கும் சேனல்கள் 6 சதவீத அளவிற்கு மட்டுமே இந்திய சேனல்களிடம் இருந்து நிகழ்ச்சிகளை பெற்று ஒளிபரப்ப வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஆணையத் தலைவர் அப்சர் அலாம், நமது நாட்டின் சட்டத்திட்டத்திற்கு எதிரான இந்திய டிஷ்களை பயன்படுத்தி தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அண்மையில் காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் சர்வதேச அளவில் கொண்டு செல்ல தூதர்களை நியமித்த போது, பாரதப் பிரதமர் மோடி, பலுசிஸ்தான் பிரச்னையை எழுப்புவோம் என்று கூறியிருந்தார். இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலூசிஸ்தான் மக்களுக்காக, பலூச் மொழியில் அகில இந்திய வானொலி தனது ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே, இந்திய சேனல்கள் மீதான தடை என்று கூறப்படுகிறது.