சில நேரங்களில் படி படி எனப் படித்தால், பிடி பிடி எனப் பிடிக்கும்படியாய் ஆகியிருக்கிறது…
‘உடும்புப் பிடி’ … ‘சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப் பற்றினோம் என்றால், அதனை உறுதியாகப் பற்றுதல், கை நழுவி விடாத அளவுக்கு கண்மூடித்தனமாகப் பற்றுதல் என்று கொள்ளலாம்.
இன்னும் குரங்குப்பிடி, பூனைப்பிடி என்றெல்லாம் சில பிடிகள் உண்டு. வைணவ மார்க்கத்தில் இரு வழிகளை அவ்வாறு சொல்வார்கள்.
ஆனால் இங்கே எனக்குத் தோன்றிய ஒரு பிடி, கைப்பிடி!
கைப்பிடி என்றால், நம் கை பிடிக்கும் பிடி அல்ல, மாறாக நம் கையைப் பிடிக்கும் பிடி!
ஒரு சிறுவன். தன் தாயுடன் ஆற்றின் கரையில் நின்றிருந்தான். ஆற்றைக் கடக்க வேண்டும். தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது அவனது தாய் சொன்னார்.. “என்னுடைய கையை அழுத்தமாகப் பிடித்துக் கொள் மகனே…”
அந்தப் பையன் பதிலளித்தான்… “வேண்டாம் அம்மா. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”
அதற்கு அவனது தாய் கேட்டார்…. “ஏன்? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?” என்று!
அதற்கு மகன் பதில் சொன்னான்… “நான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்லும்போது… எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது உங்கள் கையை விட்டு விட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடலாம். ஆனால்… நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால்… அம்மா எனக்கு நன்றாகத் தெரியும்… நீங்கள் எந்தச் சூழலிலும் என் கையை நழுவ விடமாட்டீர்கள்!” என்றான்!
இதுதான் தாய்ப்பாசத்தைக் காட்டும் கைப்பிடி. இந்தக் கைப்பிடியில், மனசின் பிடியும் வெளிப்படுகிறது. அதாவது, தன் தாயின் மீதான நம்பிக்கை. பிடிப்பு. பற்று எல்லாம்தான்!
இப்படித்தான் உறவு முறைகளின் மீதான பிடிப்பும்!
கணவன் மனைவியிடையேயான பிடி இப்படி இருந்தால், எப்போதும் அங்கே பிரிவுக்கு வழியிருக்காது. காரணம் அது மனசின் மீதான பிடிப்பு.
பொதுவாக தன் பெண் குறித்தான வார்த்தைப் பரிமாறலில் பெற்றோர் சொல்லும் சொல்வழக்கு… “இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துட்டா கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்” என்பது. இந்தக் கைப்பிடித்தல்தான், வாழ்க்கையின் கடைப்பிடித்தல். இது ஒருவருக்கு ஒருவர் மீதான நம்பிக்கையின் பிடிப்பைக் காட்டுவது.
இந்த நம்பிக்கைப் பிடி எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைத்துவிட்டால் அந்த நம்பிக்கைக்கு சிதைவு வராமல், சிக்கெனப் பிடித்தல்.
வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வரும்.. தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்பது…
நட்பும் சரி, காதலும் சரி… இது நம்பிக்கைக்கு உரியது என்று தெளிந்து நட்பை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அதில் எழும் ஐயமானது, தீர்க்கவியலா துன்பத்தையே தரும்.
தலைவன் மீது தொண்டன் வைக்கும் நம்பிக்கை, ஒரு நிறுவனத்தில் தலைமை மீது அடுத்த நிலையில் உள்ளோர் வைக்கும் நம்பிக்கை எல்லாம் இத்தகையதாக இருந்தால், அது நிச்சயம் நலம் பயக்கும்.
நெப்போலியன் இட்ட கட்டளைகளை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்று, அவன் மீது நம்பிக்கை வைத்து படைகள் சென்றன. வெற்றி கனிந்தது. ரஷ்யா மீதான படை எடுப்புக் காலத்தில் ஒவ்வொருவர் கருத்தாக மாறி மாறிப் புகுந்து, தாமதம் ஏற்பட்டு, சரியான நேரம் தவறி, மழைக்காலத்தில் போய் மாட்டிக் கொண்டதால்… தோல்வியைத் தழுவினான் நெப்போலியன்.
அலெக்ஸாண்டரின் வரலாறும் இதையே சொல்லும். பாரத நாட்டின் மீதான படையெடுப்பு அலெக்ஸாண்டருக்கு கனியாமல் போனதும் இதனால்தான்.
“சுடு’ என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்… பகுத்தறிவு மிஞ்சும்… நாடு மிஞ்சாது!
இதுவும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கைதான். ஆனால், வெற்றியைத் தரும் நம்பிக்கை.
போர்க்களத்தில் தன் எதிரில் நிற்பவர்கள் எல்லோருமே ஒரு வகையில் உறவினர்கள். பாசமும் நேசமும் மிக்க உறவினர்கள், நண்பர்களை போர்க் களத்தில் எதிர்த்து நின்றபோது, போரில் பெரிதும் தயக்கம் காட்டினான் அர்ஜுனன். அவனைப் பார்த்துக் கண்ணன் சொன்னான்… “போர்’ என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது’ என்று.
இறுதியில், கண்ணன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். போரின் முடிவு வெற்றியாகக் கனிந்தது.
இதில் கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்குள் புக விரும்பவில்லை.
ஆனால், முதலில் சொன்ன தாய் – மகன் உரையாடலின் நம்பிக்கை அடிப்படையில், குரங்குப் பிடியும், பூனைப் பிடியும் உள்ளது என்று கூறியிருந்தேன் அல்லவா..? அதன் உள்ளர்த்தம் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?
மர்க்கட நியாய, மார்ஜர நியாய என இரு நியாயங்கள் உண்டு. தர்க்க சாஸ்திரம் இதனைக் காட்டும்.
வைணவத்தில் இரு வேறு வழிகளை பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள். இவை இரண்டும் இரு வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பிறந்தவை. மேலே சொன்ன தாய் – மகன் உரையாடலைப் போல!
பிடி- யார் பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த வித்தியாசத்தை உணர்த்துகின்றது.
குரங்கு மரத்தை விட்டு மரம் தாவிக் கொண்டே இருக்கும். குரங்கு செல்லும் வழியெல்லாம் அதன் குட்டியும் செல்ல வேண்டும். குரங்கு அளவுக்கு அதன் குட்டிக்கு வலு இருக்காது. பாதுகாப்பாய் வளர வேண்டும். என்ன வழி?
அதனால்தான், குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கொள்ளும். எவ்வளவு உயரத்தில் இருந்தும் குரங்கு கீழே குதித்தாலோ அல்லது மரம் அல்லது மதில் மேல் தாவி ஏறினாலோ… குரங்குக் குட்டி தாயின் பிடியில் இருந்து கீழே விழுவது மிக மிக அரிதான ஒரு செயலாகவே இருக்கும்.
தமிழில் இறைவன் மீது பக்தி செலுத்தும் பக்தர்களை இவர்களில் ஒரு வகையினராகப் பிரிப்பர். குரங்கைப் போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனை சிக்கெனப் பிடித்துக் கொள்வர். இதை வைத்தே தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொல்லாட்சி உருவானது.
அடுத்தது பூனை. குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால், பூனையின் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறுமனே இயக்கம் இன்றி சடப் பொருளாய் இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் தாய்ப் பூனையிடமே விட்டுவிட்டு தாயே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்துவிடும். இது அடுத்த வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.
அதாவது, தாமே சென்று கடவுளை சிக்கெனப் பிடித்தல், குரங்கைப் போன்ற பக்தர்களின் வகை. தேமே என்று, கடவுள் விட்ட வழியாக கடவுளைச் சரண் அடைந்து இருப்பது பூனையின் வகை!
இது வைணவத்தில் கூறப்படும் பக்தர்களின் வகை விளக்கம் என்றால், சைவத்தில், அப்பர் பெருமான் பக்தர்களை ஏணி என்றும் தோணி என்றும் இரு வகையாகப் பிரிக்கிறார்.
ஏணி- தாமாக மேலே ஏற முயற்சி செய்பவர்களை மேலே ஏற்றி விடும். ஏணியில் ஏறும் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தோணி என்பதில் – படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை இக்கரையில் இருந்து அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். நாம் வெறுமனே தோணியில் அமர்ந்திருந்தால் போதும். அதாவது இறைவனைச் சரணடைந்து, நீயே என்னை அக்கரைக்குக் கொண்டு செல் என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டு இருப்பது.
இவை இரண்டுமே நம்பிக்கையின் அடிப்படையிலான இரு வகைகள். இரண்டிலுமே, காத்தலும் காக்கப்படுதலும் உறுதி செய்யப் படுகிறது.
ஆனால்… நம்பிக்கையின்மை என்பது, இதற்கு முற்றிலும் நேர் மாறானது.
நம்பிக்கையின்மையின் முதல் படி, ஒருவர் மீது நாம் கொள்ளும் சந்தேகம், ஐயம் எல்லாம்தான்! இதற்கு மனமே காரணம். மனமே நம் நடத்தையைத் தீர்மானிக்கிறது.
அவநம்பிக்கை என்ற சொல்லும் இதில் உருவானதுதான்!
நம்பிக்கை, அவநம்பிக்கை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லும்போது… நம்பிக்கையைத் தகர்த்தல் எனும் சொல்லுக்கு நாம் பொதுவில் கையாள்வது – நம்பிக்கைத் துரோகம் என்பது.
இந்த ஒரு செயலால், எத்தனையோ வெற்றிகள் பறிக்கப் பட்டிருக்கின்றன. நம் வரலாற்றில் திருப்பிப் பார்த்தால்… உடன் இருந்து பாதகம் செய்யும் நம்பிக்கைத் துரோகிகளால்தான் பல மன்னர்கள் எதிராளியிடம் தோற்று, தங்கள் மணி முடிகளை இழந்திருக்கிறார்கள்.
இதை வைத்தே தமிழ் இலக்கியங்கள், நம்பிக்கைத் துரோகத்தை ஒரு பொருளாகக் கொண்டு பல பாடல்களில் பேசுகின்றன.
திருக்குறளில் வள்ளுவர் ஓர் அதிகாரத்தையே வைத்தார். அகமும் புறமும் நம்பிக்கை இன்மையையும் நம்பிக்கைத் துரோகத்தையும் பல இடங்களில் பேசுகின்றன.
தலைவன் – தலைவி மீதான காதல் அவ நம்பிக்கை, அரசன், நட்பு மீதான நம்பிக்கை துரோகம் என!
ஆற்றில் செல்லும்போது தோணியில் ஒரே ஒரு ஓட்டை விழுந்தால்… தோணியில் உள்ள அனைவருமே நட்டாற்றில் மூழ்கி நல்லுயிரை இழக்க நேரும்.
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர் என்று ஒரு சொலவடை உண்டு. அதனை ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தாற்போல் எனக் கொள்ளலாம்.
இந்தப் பழமொழியை அமைத்து ஒரு அருமையான பாடலை பழமொழி நானூறு(136) காட்டுகிறது.
எயப்புழி வைப்போம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு.
வளையல் அணிந்த பெண்ணே! நமக்கு தளர்வு உண்டாகும் காலத்தில், பெரிய செல்வத்தைப் போன்று கைகொடுத்து உதவுவர் என நினைத்து நம்மால் விரும்பி நட்பு கொள்ளப் பட்டவர், நமக்கு ஒரு துன்பம் வந்த போது, சிறிதும் உதவாதவர் ஆகி, அச்சம் காரணமாக நமக்கு உதவாமல் போனால், அது ஒருவனை மச்சின் மீது ஏற்றி விட்டு ஏணியை எடுத்துவிடுகிற செயல் ஆகும் – என்பது இதன் பொருள். இதன் பழமொழி – மச்சு ஏற்றி ஏணி களைவு.
இதைப் போல் இன்னொரு பாடலில் பேதையாருடன் கொள்ளும் நட்பு குறித்து பழமொழி நானூறு (138) பேசுகிறது.
இடையீ டுடையார் இவரவரோ டென்று
தலையாயார் ஆராய்ந்தும் காணார் – கடையாயர்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
பின்இன்னா பேதையார் நட்பு.
தம் நண்பர் மீது பிறர் கோள் சொன்னால், கோள் கூறும் அந்த நபர், நண்பருடன் பகைமை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டு, அவர் கூறியவற்றை ஆராய்ந்து, நண்பர் மீது குற்றம் காணமாட்டார். அவரே தலைசிறந்தவர்.
மாறாக, தம் நண்பர் மீது மற்றவர் வந்து கூறும் கோள் சொற்களை உண்மையாகவே எண்ணி, நண்பர் மீது பகைமை கொள்பவர் கீழானவரே. எனவே, பேதையாரின் நட்பு, பின்னர் நமக்குத் துன்பம் தருவதாகவே அமையும்.
இந்தப் பாடலில், பின் இன்னா பேதையார் நட்பு என்பது பழமொழியாக வந்து அறிவுரை காட்டும்.
இப்போது, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நம்பிக்கைத் துரோகம் இவற்றுக்கிடையேயான வேற்றுமையை உணர்ந்து நட்புக் கொள்தல், நலம் சார்ந்த வாழ்க்கைக்கான நல்வழி!



