அருண்ஜேட்லி மறைவு; தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜக., தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி காலமான நிலையில், அவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில்… வலிமை, துணிவுடன் வெகு காலம் உடல்நலக்குறைவுடன் போராடிய ஜேட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான வழிக்கறிஞர், புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளவிட முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாட்யுடு தனது இரங்கல் செய்தியில், ஜேட்லியின் மறைவு, தேசத்துக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. என் சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை! திறமையானவர், சிறந்த நிர்வாகி அவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருண் ஜேட்லியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட இழப்பு. கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்ல, எனது குடும்பத்தில் முக்கியமான உறுப்பினரை இழந்து விட்டது போல் உணர்கிறேன். எப்போதும் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர் அவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் குறிப்பில், தேசத்திற்கும் அரசுக்கும் கட்சிக்கும் கிடைத்த சொத்து. அவருக்கு அஞ்சலி செலுத்த தில்லி விரைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீண்ட மருத்துவ போராட்டத்துக்கு பிறகு அருண் ஜேட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான எம்.பி., சிறந்த வழக்கறிஞர், கட்சி வேறுபாட்டைக் கடந்து பலராலும் பாராட்டப் படுபவர். இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அருண் ஜேட்லி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லியின் திடீர் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு! அவர் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், அறிவார்ந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை அதிகம். தேசம் ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. நான் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோதிராதித்யா சிந்தியா.

அருண்ஜேட்லியின் மறைவு குறித்துச் சொல்ல எந்த வார்த்தையும் எழவில்லை. பலருக்கு ஆசானாக விளங்கியவர். தார்மீக ஆதரவையும் பலத்தையும் அளித்தவர். அவரிடமிருந்து கற்றுக் கொண்டவை பல. நல்ல மனது கொண்டவர். எவராயிருந்தாலும் உடனே ஓடி வந்து உதவத் தயாராக இருந்தவர். அவரது அறிவுக் கூர்மையை ஒப்பிடவே முடியாது என்று கூறியுள்ளார் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

முன்னாள் நிதி அமைச்சர் மரியாதைக்குரிய திரு.அருண் ஜெட்லி அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது – தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

https://twitter.com/DrTamilisaiBJP/status/1165215566988070912

பாமக., நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர் சங்கத்தில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அருண் ஜேட்லி, பின்னாளில் அதன் தேசியத் தலைவராக உயர்ந்தார். நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட அவர் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் முக்கியத் தலைவராக திகழ்ந்தார்.

நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஜனசங்கத்திலும், அந்த அமைப்பு பின்னர் பாரதிய ஜனதாவாக மாற்றப்பட்ட போது அக்கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றிருந்த அவர், வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டார். சிறுநீரகக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அருண்ஜேட்லியின் மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்லையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...