வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!

Published:

senkottai vinayakar chaturthi procession3 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பாரம்பரியமான ஊர்வலப் பாதையில் தொடங்கி, மிக அமைதியான முறையில் நடைபெற்றது. வழக்கமாக மூன்று மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு மேல் நீளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த முறை பலத்த பாதுகாப்புடன் முன்னதாகவே தொடங்கியது.

மதியம் 12 மணியளவில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒரே இடத்தில் கொண்டுவரப்பட்டு ஊர்வலம் தொடங்கி செங்கோட்டை நகர் வீதிகளில் வலம் வந்தது. மாலை 5 மணிக்கு முன்னதாகவே அனைத்து சிலைகளும் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கரைக்கப்பட்டன!

செங்கோட்டை நகரில் இந்த முறை எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்!

senkottai vinayakar chaturthi procession1 - 2026

தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மேற்பார்வையில் ஊர்வலம் நடைபெற்றது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் வட்ட ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்து வந்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

முன்னதாக, குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு வெளியில் வந்தவர்கள், பிரச்னைக்கு உரியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். தொடர்ந்து நகர் முழுதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்!

விநாயகர் சிலைகள் குண்டாற்றில் கரைக்கப்பட்ட பின்னர் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன்.

senkottai vinayakar chaturthi procession2 - 2026

அப்போது அவர், செங்கோட்டை நகரில் ஊர்வலம் அமைதியாக நடைபெற காவல்துறை, வருவாய்த்துறை, இதர அரசுத்துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து கடந்த 10 நாட்கள் அனைத்து தரப்பு சமுதாய மக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை வகுத்து, அதனைக் கடைப்பிடித்து இன்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழா சிறு அசம்பாவிதமும் இன்றி மிகவும் அமைதியாக நிறைவடைந்துள்ளது!

இதற்காக செங்கோட்டை நகர் வாழ் அனைத்து தரப்பு சமுதாய மக்கள், விழாவை நடத்தியவர்கள், விழாவில் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

தொடர்ந்து இனிவரும் காலங்களிலும் இது போல் அமைதியாக மிகவும் சிறப்பாக இதைவிட இன்னும் சிறப்பாக ஊர்வலம் நடைபெற இந்தப் பகுதியினர் செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும்!

senkottai vinayakar chaturthi procession4 - 2026

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றிய எங்கள் காவல் அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் இந்த தருணத்தில் என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடையநல்லூரிலும், செங்கோட்டையில் நடைபெற்றது போன்று, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது!இதேபோன்று நாளை அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்…. என்று கூறினார் தென்மண்டல ஐஜி., சண்முக ராஜேஸ்வரன்.

senkottai vinayakar chaturthi south zone ig shanmugarajeswaran - 2026
தென்மண்டல ஐஜி., சண்முகராஜேஸ்வரன்

செங்கோட்டை நகரில் கடந்த வருடம் போல் பிரச்னை ஏதும் ஏற்படாமல், அமைதியாக நடைபெற்றது குறித்து தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊர்வலம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த செங்கோட்டை நகர அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன். நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் எந்த வித பிரச்னையையும் சரி செய்யலாம் என்பதற்கு முன்னுதாரணமாக செங்கோட்டை மக்கள் இருந்தனர்… என்று பாராட்டினார்!

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img