சென்னை :
சென்னையில் பரபரப்பான பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் பேச மறுத்ததால் இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர் போலீஸாரிடம் சரண் அடைந்தார்.
சென்னை நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் சோனியா (23). இவர் தாம்பரத்தில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வீடு திரும்புவதற்காக பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றுள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்த பிரசாத் (24) என்ற இளைஞர், பைக்கில் ஏறும்படி சோனியாவை அழைத்துள்ளார். அதற்கு சோனியா மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரசாத், கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்து விட்டு, பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க அருகில் இருந்தவர்கள் முயன்றும், முடியவில்லை.
தப்பிச் சென்ற பிரசாத் பீர்கங்கரை போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்துள்ளார்.
அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரசாத், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் 6 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். பிரசாத், சோனியாவை தனது பைக்கில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரசாத்தின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில வாரங்களாக சோனியா, பிரசாத்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பிரசாத்தின் தொலைப்பேசி அழைப்பையும் சோனியா தவிர்த்து வந்துள்ளார். இதனால் நேற்று அவரை பின்தொடர்ந்து வந்த பிரசாத், பைக்கில் ஏறும்படியும், தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கு சோனியா மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனியாவை, அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சோனியா உயிரிழந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒருதலைக் காதலால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர், ராம்குமார் என்ற இளைஞனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது…