
ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய அரசு வழங்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரஜினிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் செய்தி வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்…
கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழகத்தின் தலை சிறந்த நடிகரும், உலகளவில் இத்துறையில் புகழ் பெற்றவருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை (ICON OF GOLDEN JUBILEE Award) மத்திய அரசாங்கம் வழங்குவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் பேருந்து நடத்துனர் பணி, திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படமான அபூர்வ ராகங்களில் தனி முத்திரையைப் பதித்து 40 வருடங்களுக்கு மேலாக இன்று வரை ரஜினிகாந்த் அவர்கள் திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என எவராலும் அசைக்க முடியாத நிலையை எட்டியிருக்கிறார்.
திரு. ரஜினிகாந்த் அவர்கள் திரை துறையில் அடியெடுத்து வைத்த போது, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் கொடி கட்டி பறந்த காலம். இன்னும் பல நட்சத்திரங்கள் திரைத்துறையில் இருந்தபோது, இந்த வரிசையில் பின்பாக வந்த ரஜினிகாந்த் அவர்கள் தனது தனித்துவமான நடிப்பாற்றல் மூலம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, நிரந்தர கதாநாயகன் என்ற நிலைக்கு முன்னேறி, இவரது அடுத்த தலைமுறையான அஜீத்-விஜய் மற்றும் உள்ள பல இளம் கதாநாயகர்கள் மத்தியிலும் அவர் இன்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருவது தமிழ் திரை உலகில் யாருமே கற்பனை செய்திட முடியாத உச்சமாகும்.
தனது நடிப்பாற்றலால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களையும் ஈர்த்து தமிழ் திரை உலகிற்கு தனிப்பெரும் சிறப்பை கொண்டு வந்த பெருமை திரு. ரஜினிகாந்த் அவர்களைச் சாரும்.
திரு. ரஜினிகாந்த் அவர்கள் திரைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், சாதாரண மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும், அதற்கு அரசும், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தொண்டு மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என எதிர்பார்த்து, அதில் ஏமாற்றம் அடையும் போது தனது ஒற்றைக் குரல் கொடுத்து அரசியல் மட்டத்திலும் தன்னால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என நிரூபித்துக் காட்டியவர்.
தன்னுடைய தாழ்ந்த நிலையில் இருந்து பல படிகள் உயர்ந்து உச்சமடைந்த நிலையிலும், தன்னை தூக்கி விட்ட ஏணிகளாக விளங்கிய திரைத்துறையை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்களை மறக்காமல், அவர்களையும் கைதூக்கிவிடும் ரஜினிகாந்த் அவர்களின் அன்பு பாராட்டுக்குரியது. சமீபத்தில் திரைத்துறையைச் சேர்ந்த 90 வயது பெரியவர் அய்யா திரு. கலைஞானம் அவர்களுக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை என்ற செய்தி அறிந்த அதே நிமிடத்தில் அவருக்கு அவருக்கு வீடு வாங்கி தருவதாக வெளிப்படையாக அறிவித்து. ஒரு மாதத்திற்குள் அதனை நிறைவேற்றியவர் திரு. ரஜினி காந்த் அவர்கள்.
உலகளவில் புகழ்பெற்று பல நாட்டுத் தலைவர்கள், இந்தியாவின் பிற அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல நட்பும், பழக்கமும் கொண்டிருந்தாலும், தன்னை இந்த அளவிற்கு உயர்த்தி விட்ட தனது ரசிகப் பெருமக்களை நன்றி மறவாமல் மனதில் கொண்டாடும் அவரது பண்பு அவரது குணத்தின் உச்சம்.
இதுபோன்ற பல சாதனைகள் நற்குணங்கள் பெற்றுள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (ICON OF GOLDEN JUBILEE Award) அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. பொருத்தமான நபருக்கு, பொருத்தமான வகையில் கௌரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திரு. ரஜினிகாந்த் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் உழைப்பை மட்டுமே நம்பி உயரத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த அறிவிப்பு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என நம்புகிறேன்.
இவ்விருதுக்கு பரிந்துரை செய்த மத்திய அரசுக்கும், குறிப்பாக இத்துறையின் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் அவர்களுக்கும், நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் ஒரு தமிழனாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதுபோல், நடிகர் ரஜினி காந்த்துக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தனது டிவிட்டர் பதிவில்…



