உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன.
கோகிமா:
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியின அமைப்புகள், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆனாலும், தேர்தலை நடத்துவதில் மாநில அரசு தீவிரமாக இருப்பதால், பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன. கோகிமா மாநகராட்சி கட்டிடம், மண்டல போக்குவரத்து அலுவலகம், கலால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
முதல்-மந்திரி ஜெலியாங் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று பழங்குடியின அமைப்புகள் அறிவித்துள்ளன.



