தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை: என்.ஆர்.தனபாலன்

  சென்னை: தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் கலாசாரத்தையும், தமிழர் பண்பாட்டையும் சீர்குலைக்க முயலும் போராட்டம் இது. பெரியார் உயிருடன் இருந்தால் இது போன்ற கேவலமான போராட்டத்தை அறிவித்தித்திருக்க மாட்டார். எந்த ஒரு தமிழ்ப் பெண்ணும், தன் கணவர் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தாலியையும் குங்குமத்தையும் தினம் தினம் போற்றி மகிழ்வாள். ஏப்.14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்ப் பெண்கள் மதிக்கும் மங்களகரமான தாலியை கொச்சைப்படுத்தத் துடிக்கும் வீரமணியின் போராட்டம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நட்டுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.