பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் இன்று(பிப்.,28), 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்; அதனால், வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, அப்போது உயிர் இழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் உட்பட, பல கோரிக்கைகளை, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
*பேச்சு தோல்வி:*
இது தொடர்பாக, மத்திய அரசுடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், கூட்டமைப்பினர் இன்று(பிப்.,28) ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொது மற்றும் அரசுத் துறை வங்கிகள்; கூட்டுறவு வங்கிகள்; பழைய தனியார் வங்கிகள்; வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
*கோரிக்கைகள்:*
இது குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது: அரசு வங்கிகளின் பல பணிகளை, தனியாருக்கு தரவும், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், வங்கிகளை தனியார் மயமாக்கவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது; இவற்றை கைவிட வேண்டும். ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க வேண்டும்; பல ஆயிரம் கோடி வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில், 8 000 கிளைகளில் பணிபுரியும், 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். சென்னையில், வள்ளுவர் கோட்டத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
*சில வங்கிகள் செயல்படும் :*
பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர். அதே நேரம், புதிய தனியார் வங்கிகளான, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., – கோட்டக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இந்த வங்கிகள், வழக்கம் போல செயல்படும். மற்ற வங்கிகள் செயல்படாததால், வங்கிகளுக்கு இடையே நடைபெறும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும்.



