பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத் திட்டத்தில் கூடுதல் பலன்களை வழங்க வேண்டும். வங்கி ஊழியர் சங்கங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த முயன்று வரும் மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு
சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கூட்டுறவு வங்கிகள், 61 கிராமப்புற வங்கிகள் உள்பட மொத்தம் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடின. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
பிப். 28 மாத இறுதிநாளாக என்பதால் சிறிய மற்றும் பெரும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியதாக வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்: கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கனரா வங்கி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டப்பொதுச்செயலர் ரெங்கன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகி கில்பர்ட்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நம்பிராஜன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி செளந்தர்யா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகி முத்தையா உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



