
ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க தீபாவளி நாளில் இரண்டு மணி நேரமும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் அதாவது 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது, உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை, அந்தந்த மாநில அரசுகள் கடுமையான கண்காணிப்புடன் செயல்படுகின்றன. தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் நேர கட்டுப்பாடு தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில்,’ஆங்கில புத்தாண்டு நாட்களில், பட்டாசு வெடிப்போர் எண்ணிக்கை குறைவு.
பனிக்காலம் என்பதால், பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படும். எனவே, அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; அனுமதிக்கப்படாத நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு மத்தியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால், புகார்கள் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.