சென்னை : அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த செயலை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
*ஜி.ராமகிருஷ்ணன் கருத்து*
லஞ்சம் கொடுத்த தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கே பணம் கொடுத்தவர் தான் டி.டி.வி. தினகரன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
*திருமாவளவன் பேட்டி*
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தை ஊழல்மயப்படுத்த தினகரன் முயற்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தையே விலைபேச முடியும் என டி.டி.வி. தினகரன் நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
*முத்தரசன் பேட்டி*
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தரமுடியும் என்ற செய்தி கவலை அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை எனவும் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல் என்று கூறினார்.
*கோபண்ணா கருத்து*
அதிமுகவே ஒரு ஊழல் கட்சிதான் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழிவந்த தினகரனின் செயல் வெட்கக்கேடான செயல் என்று தெரிவித்தார்.மேலும் ஊழல் பணம்தான் அதிமுகவின் பலம் என கோபண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
*திமுக வழக்கறிஞர் பேட்டி*
பண பலத்தை மட்டும் நம்பியே அதிமுக செயல்படுகிறது என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளனர்.



