
சென்னை:
மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் வேலூரில் செய்வாய்க்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 95.
மூத்த அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் இரா.செழியன். திருவாரூரில் பிறந்த வர். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காத்தவர். ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி. சிறுகதைகள், நாடகங்கள் பல எழுதியுள்ளார்.
மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்து, திமுக., தொடங்கப்பட்டபோது, அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1977ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
1988ஆம் ஆண்டு ஜனதா கட்சி உடைந்து, ஜனதா தளம் தோன்றியது. வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்தில் செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக் தளம் உருவான போது, செழியன் அதில் துணைத் தலைவர் ஆனார். பின்னர் 2001ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார்.
இரா. செழியனின் மறைவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன் இரங்கல் செய்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. இரா.செழியன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தவரை தேசம் இழந்தது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தவரை தேசம் இழந்தது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை (2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) June 6, 2017
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.
பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல்:
இரா.செழியன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் வேலூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
திராவிய இயக்கத்தின் அறிவுச்சுரங்கங்களில் இரா. செழியன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய செழியன் ஒவ்வொரு அவையிலும் தமது முத்திரையை பதித்தார். அண்ணாவின் அன்பைப் பெற்ற செழியன், திராவிட இயக்கத்தின் சீரழிவை உணர்ந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி ஜனதாக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நான் போற்றும் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அன்புக்கு பாத்திரமான செழியன், 1988-ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் கட்சியை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார். அரசியலில் தூய்மையை கடைபிடித்த செழியன், பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்காக போராடினார்.
செழியன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Parliament for The People (மக்களுக்காக நாடாளுமன்றம்) என்ற நூல் நிகழ்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டி ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று கூறியுள்ளார்.



