
பீஜிங்:
என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராகும் பிரச்னை, மேலும் சிக்கலாகி உள்ளது என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தின் உறுப்பினராக இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, தென் கொரியாவின் சியோலில் நடந்த, என்எஸ்ஜி., கூட்டத்தில், இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு அண்டை நாடான சீனா தடையாக இருந்தது. சீனாவின் துாண்டுதலில் பாகிஸ்தானும் இதற்கு விண்ணப்பித்திருந்தது.
‘இந்தியா போன்ற அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை குழுமத்தில் சேர்க்கக் கூடாது’ என சீனா வலியுறுத்தியது. அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக முடிவு செய்தால்தான் உறுப்பினராக முடியும் என்ற நிலையில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதும், சீனாவின் எதிர்ப்பால் இந்த அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
என்எஸ்ஜி.,யின் கூட்டம், இந்த மாதத்தில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் நடக்க உள்ளது. இம்முறையாவது இந்தியா உறுப்பினராக வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லி ஹூய்லாய், என்எஸ்ஜி, உறுப்பினர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மாற்றி அமைக்கலாம் என, என்எஸ்ஜி.,யில் உள்ள அனைத்து நாடுகளும் முடிவு செய்தால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை, இந்தியாவுக்கு எதிராக சிக்கலாகவே உள்ளது என்று கூறினார்.



