
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பால் கொடுத்தபடியே தன் மார்பில் இறுக்கி, இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோயில் அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகள், ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இது குறித்து சந்தேகம் தெரிவித்து புகார் வந்ததால் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன.
பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், கழுத்தை நெரித்து அக்குழந்தைகள் கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில், தாயே அந்தக் குழந்தைகளைக் கொன்றது தெரியவந்தது. இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற குழந்தைகளின் தாய் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்களை, தாயே கொலை செய்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.



