
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் இன்று இரவு 8.30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகரும் வீரமரணம் அடைந்தார்.

அவருடைய உடல் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கொண்டு வரப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ராணுவத்தினரால் எடுத்து வரப்பட்டு, மாலை 7 மணிக்குப் பின்னர் முறைப்படி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் இரவு 8.30க்கு செங்கோட்டை இரட்டைக்குளம் பகுதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

அதற்கு முன்னதாக, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட எஸ்.பி., சுகுணா சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் போலீஸார் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

இதனிடையே வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் ராஜலட்சுமி, சந்திரசேகர் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிதியை வழங்கினார். நகரின் அதிமுக.,வினர் குட்டியப்பா (எ) கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வீர மரணமடைந்த சந்திரசேகர் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் செங்கோட்டை முதல் இரட்டைக்குளம் வரை திரண்டு நின்று மலர் தூவி மரியாதை செய்தனர். கொரோனா நேரத்தில்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட செங்கோட்டை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.