
தமிழகத்தில் இன்று புதியதாக 509 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்தது.
இன்றும் அதிகபட்சமாக சென்னையில் 350 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் மட்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 பேருக்கும் திருவள்ளூரில் 25 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் அரியலூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு பேருக்கும் விழுப்புரத்தில் ஏழு பேருக்கும் தேனி மாவட்டத்தில் ஐந்து பேருக்கும் கரூர் மதுரை நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா இருவருக்கும் தூத்துக்குடி தஞ்சாவூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகுறது என்றார்.
மேலும், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர் என்றும், தமிழகத்தில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை இல்லை; விவசாய விளை பொருள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் பாதிப்பு அதிகமானது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்துடன் கூறினார். கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது என்று கூறிய முதல்வர், நஷ்டத்தை காரணம் காட்டி கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார்.

மேலும், அரசு சிறப்பாக செயல்படவில்லை என தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்றும் காரணத்தை விளக்கினார்.
விவசாயிகள் காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம் என்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல என்றும் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற இடங்களில், 50 சதவீத தொழிலாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று கூறிய முதல்வர், தமிழகத்தில் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பின் திறக்கலாம்; மக்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்க வேண்டும் என்றும் கூறினார்.